இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, பெங்களூரில் உலக வர்த்தக மையத்தில் (World Trade Center) இருந்த தனது தலைமையகத்தை, பெங்களூர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சத்வா டெக் பார்க்கிற்கு மாற்ற உள்ளது. அமேசானின் இந்திய நிர்வாகம் தற்போது மிகப்பெரிய செலவின குறைப்பு நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது, இதன் ஒரு பகுதியாக அலுவலகத்தின் வாடகை செலவுகளைக் குறைக்க இந்த முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அமேசான் இந்தியாவின் தற்போதைய அலுவலகம் உலக வர்த்தக மையத்தில் 18 மாடிகளில் சுமார் 13 மாடியை வாடகைக்கு எடுத்துக் கிட்டத்தட்ட 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அலுவலகம் அமைத்துள்ளது. சொல்லப்போனால் பெங்களூர் World Trade Center-க்கு அடையாளமாக இருப்பதே அமேசான் நிறுவனம் தான்.

அமேசான் நிறுவனம் இந்த முக்கிய இடத்தை காலி செய்வதால், இந்த World Trade Center சொத்தின் உரிமையாளரான பிரிகேட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டிற்கு புதிய குத்தகைதாரரை உடனடியாக தேடி கண்டுபிடிப்பதில் பெரும் சவால் இருக்கும். அமேசானின் வெளியேற்றம் பிரிகேட் எண்டர்பிரைசஸ்-ன் வாடகை வருமானத்தைப் பாதிக்கலாம்.
அமேசான் தற்போது பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 15 நிமிட பயண தூரத்தில் இருக்கும் Sattva Horizon என்னும் டெக் பார்க்கில் சுமார் 11 லட்சம் சதுரடி பரப்பளவில் 7000 பேர் பணியாற்றும் வகையில் அலுவலகத்தை அமைக்க உள்ளது. இந்க புதிய அலுவலகம், தற்போதைய World trade center அலுவலகத்தின் வாடகை விகிதமான சதுர அடிக்கு ரூ.250 மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானத் தொகைக்கு புதிய அலுவலத்திற்கு மாற உள்ளது. இதன் மூலம் இரண்டு-மூன்றில் ஒரு பங்கு வரை வாடகை செலவு குறையும்.
இந்த இடமாற்றம் 2025 ஏப்ரலில் தொடங்கி 2026 ஏப்ரல் வரை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் இந்த நகர்வை உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களை அதிகாரப்பூர்வமாகப் பகிரவில்லை.
இந்த நகர்வு அமேசான் ஊழியர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த World Trade Center பெங்களூரின் மையப்பகுதியில் ஒரு டவுன்ஷிப் மத்தியில் அமைந்துள்ளது. இதனால் அமேசான் ஊழியர்கள் இப்பகுதியிலேயே வசித்து அலுவலகத்திற்குச் சென்று வருகின்றனர்.
Brigade Gateway என்னும் பெங்களூரின் முதல் இன்டிகிரேடெட் காம்பிளெக்ஸ்-ல் தான் தற்போது அமேசான் அலுவலகம் உள்ளது. இது 40ஏக்கரில் அமைந்துள்ள பிரம்மாண்ட டவுன்ஷிப் இங்கு 5 ஸ்டார் ஹோட்டல், 1200 வீடுகள், பள்ளி, மருத்துவமனை என மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. இதனால் அமேசானில் 5000 ஊழியர்கள் இப்பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் புதிய அலுவலகம் தற்போதைய தலைமையகத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், சமூகவலைத்தளத்தில் 300க்கும் அதிகமான அமேசான் ஊழியர்கள் தங்களுடைய வருத்தத்தைப் பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications