சென்னை: இந்தியாவில் குவிக் காமர்ஸ் வர்த்தகம் நாளுக்கு நாள் பூதாகரமாக வளர்ந்து வரும் வேளையில் இத்துறையில் பெரிய ஜாம்பவான்கள் இதுவரையில் யாரும் களமிறங்கவில்லை. இந்திய குவிக் காமர்ஸ் துறையில் தற்போது ஆதிக்கம் செலுத்துவது சோமேட்டோ-வின் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், செப்டோ ஆகிய 3 நிறுவனங்கள் தான்.
குவிக் காமர்ஸ் வளர்ச்சியை இதுநாள் வரையில் பொறுமையாக வேடிக்கை பார்த்த ஈகாமர்ஸ் ஜாம்பவான்கள் தற்போது களத்தில் குதித்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் பிளிப்கார்ட் மினிட்ஸ் என்ற குவிக் காமர்ஸ் சேவையை அறிமுகம் செய்து 12 நிமிடத்தில் லேப்டாப் டெலிவரி செய்தது மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிளிப்கார்ட்-ன் சக போட்டி நிறுவனமான அமேசான் சும்மாவா இருக்கப் போகிறது. அமேசான் தனது பங்கிற்குக் குவிக் காமர்ஸ் வர்த்தக திட்டத்தை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான் உயர்மட்ட நிர்வாகம் தனது குவிக் காமர்ஸ் உத்தியை உருவாக்கும் பொறுப்பை ஒரு மூத்த நிர்வாகிக்கு ஒப்படைத்துள்ளது. அமேசானில் தலைமை மாற்றம் நடக்கும் காரணத்தால் சிஇஓ-வுக்கு அளிக்காமல் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவருக்கு இந்த பணிகள் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், அமேசான், ஸ்விக்கியில் பங்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. குறிப்பாக உணவு விநியோக நிறுவனத்தின் குவிக் சேவை தளமான இன்ஸ்டாமார்ட் சேவைக்காகவே இந்த பங்கு கைப்பற்றல் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான் இதுவரையில் எந்த நாட்டிலும் குவிக் காமர்ஸ் சேவையை தொடங்கியது இல்லை, இந்தியாவில் தான் முதல் முறையாகத் துவங்க உள்ளது. இதனால் மொத்த பிஸ்னஸ் பிளானும் முடிவு செய்யப்பட்ட பின்பு அமேசான் அமெரிக்க நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த திட்டத்தை Nishant Sardana என்பவர் வடிவமைத்து வருகிறார்.
இதற்கிடையில் அமேசான் இந்திய தலைவர் மனிஷ் திவாரி பதவி விலகும் காரணத்தால் தற்போது நோட்டீஸ் காலத்தில் உள்ளார். அக்டோபரில் மனிஷ் திவாரி அமேசானை விட்டு வெளியேறுகிறார்.
Flipkart: இந்த மாத தொடக்கத்தில் பிளிப்கார்ட் மினிட்ஸ் என்ற குவிக் காமர்ஸ் சேவை பெங்களூரில் தொடங்கப்பட்டது, அதை விரைவில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய இடங்களிலும் அறிமுகப்படுத்த உள்ளது பிளிப்கார்ட் நிர்வாகம்.
பிளிப்கார்ட் மினிட்ஸ் தான் தற்போது பிளிப்கார்ட்-க்கு மிகவும் முக்கியமான வர்த்தகமாக மாறியுள்ளது. பிளிப்கார்ட் தனது வலிமையான வர்த்தக பிரிவான லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இதில் முக்கியத்துவம் கொடுத்து விற்பனை செய்து வருகிறது. பிளிப்கார்ட் இந்த ஆண்டின் பண்டிகை சீசனுக்குள் சுமார் 100 டார்க் ஸ்டோர்களை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சோமேட்டோ-வின் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், செப்டோ ஆகிய 3 நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வேளையில் பிளிப்கார்ட், அமேசான் போன்ற பணம் பலம் கொண்ட பெரிய நிறுவனங்கள் வரும் போது போட்டித்தன்மை அதிகரிக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகக் குறைந்த விலை பொருட்களையும், ஜீரோ கட்டணத்தில் சேவையும் அளிக்கும் நிலை உருவாகும். இது மக்களுக்குக் கட்டாயம் பெரும் நன்மையை அளிக்கும்.


Click it and Unblock the Notifications