2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை. வரி விதிப்பில் மாற்றங்களோ, சலுகைகளோ இடம்பெறவில்லை.
வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய குறிப்பிட்ட சில துறைகளுக்கு அரசு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. மருந்து உற்பத்தி, டேட்டா சென்டர்கள், செமி கண்டக்டர் மற்றும் அரிய வகை கனிமங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு அரசு அதிக கவனம் செலுத்தி இருக்கிறது. இவை எல்லாமே இனி வரும் நாட்களில் இந்தியாவில் முக்கியமாக வளரும் துறைகளாக இருக்கின்றன.

பட்ஜெட்டில் டேட்டா சென்டர்கள் தொடர்பாக இடம் பெற்ற மிக முக்கியமான ஒரு அறிவிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை எழுப்பி இருக்கிறது. இந்தியா டிஜிட்டல் பயன்பாடு குறிப்பாக ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து இருக்கிறது. பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு ஏஐ சேவைகளை வழங்குகின்றன.
கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய கிளவுட் சர்வீஸ் சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு இந்தியாவிலேயே டேட்டா சென்டர்கள் அமைப்பது அவசியம். இந்தியாவில் தற்போது இரண்டு பெரிய நிறுவனங்கள் டேட்டா சென்டர்களை அமைக்கும் பணிகளை பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் தான் மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் டேட்டா சென்டர்களை பயன்படுத்தி கிளவுட் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரி கிடையாது என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதாவது இந்தியாவில் தங்களுடைய ஏஐ மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படக்கூடிய டேட்டா சென்டர்களை பயன்படுத்தும் போது அவற்றுக்கு வரி இல்லை.
உலக அளவில் மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள் ஆகிய நிறுவனங்கள் கிளவுட் சர்வீஸ் சேவை வழங்குகின்றன. இதற்கு அவை இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களை பயன்படுத்தினால் வரி இல்லை என்பதுதான் இந்த அறிவிப்பின் முக்கியமான சாராம்சம். 2047 அதாவது தற்போது முதல் அடுத்து 21 ஆண்டுகளுக்கு இந்த வரி சலுகை கிடைக்கும். இந்தியாவில் தற்போது அதானி மற்றும் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் தான் டேட்டா மையங்களை அமைத்து வருகின்றன.
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு அதானி மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து டேட்டா மையங்களை அமைப்பதாக அறிவிப்பு வெளியிட்டன. இது தவிர மும்பை, புனே, ஐதராபாத் ஆகிய இடங்களில் டேட்டா மையங்களை கட்டி வருகிறது. அடுத்ததாக குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் மிகப்பெரிய ஒரு டேட்டா மையத்தை அமைத்து வருகிறது. சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் ஏற்கனவே சிறு டேட்டா சென்டர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கக்கூடிய இந்த டேட்டா சென்டர்களை பயன்படுத்தும் போது அவற்றுக்கு வரிச்சலுகை கிடைக்கும்.
இந்தியாவில் இருக்கும் டேட்டா சென்டர்களை பயன்படுத்தி இந்தியா மட்டுமில்லாமல் உலகளாவிய சேவைகளை வழங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. கூகுள்,மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுக்கு இது லாபம். அதே வேளையில் இது அம்பானி, அதானி ஆகியோரின் வருமானத்தையும் பெருக்கும். எனவே மத்திய அரசின் அறிவிப்பு டேட்டா சென்டர் தொழிலில் கால் பதிப்பவர்களுக்கு பொற்காலம் என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications