இந்தியாவில் செல்வ வரி விதிக்கும் திட்டம் இருந்தால் நாட்டின் பெரும் செல்வந்தர்களான அம்பானிகள், அதானிகள் எல்லாம் துபாய் போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து சென்று வரியை கட்டுவதில் இருந்து தப்பிப்பார்கள்.
இந்தியாவில் பெரும் பணக்காரர்களாக விளங்கும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ரத்தன் டாடா போன்றவர்கள் வரி இல்லாத நாடுகளுக்கு குடியேறிவிட்டால் இந்தியாவுக்கு பெருமளவு வருவாய் குறைந்துவிடும் என்று பிரபல அரசியல் பொருளாதார நிபுணர் கௌதம் சென் கூறியுள்ளார்.

லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸில் பணியாற்றி ஓய்வு பெற்ற கௌதம் சென் இந்திய-யுகே ரவுண்டுடேபிள் முன்னாள் உறுப்பினர், யுஎன்டிபி சீனியர் கன்சல்டன்டாக உள்ளார். இந்தியாவில் வாரிசு வரி விதிப்பு பற்றி தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் ஒப்பிட்டு இந்திய பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விளக்கம் அளித்துள்ளார் சென். அம்பானிகள், அதானிகள், மஹிந்திராக்கள், டாடாக்கள் போன்ற பெரும் பணக்காரர்கள் 500க்கும் குறைவானவர்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் எல்லாம் இந்தியாவை விட்டுவிட்டு துபாய்க்கு சென்று குடியேறிவிடுவார்கள்.
பெரும்பாலான இந்திய கோடீஸ்வரர்கள் துபாய்க்கு சென்று விட்டார்கள். 70 சதவீதத்தினர் இதுபோல் சென்று விட்டனர். ஏனென்றால் துபாயில் வருமான வரி இல்லை. அவர்கள் தங்களது தொழிலை ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பதிவு செய்து கொள்வார்கள். இதனால் இந்தியாவால் அவர்களிடமிருந்து கார்ப்பொரேட் வரியை மட்டுமே வசூலிக்க முடியும்.
இந்த காரணத்தினால் இந்தியாவுக்கு பெரும் பொருள் இழப்பு ஏற்படும். ஸ்வீடனில் பெருமளவு வாரிசு வரி வசூலிக்கப்படுகிறது. உலகிலேயே அதிக வரி வசூல் செய்யும் நாடாக ஸ்வீடன் உள்ளது. ஆனால் அந்த நாட்டை விட்டு பணக்காரர்கள் எல்லாம் வெளியேற ஆரம்பித்ததால் வாரிசு வரியை ஸ்வீடன் அரசு ஒழித்து விட்டது.
இதைத் தொடர்ந்து இழந்த செல்வங்கள் மீண்டும் திரும்பியது. அந்த நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையத் தொடங்கியது. செல்வ வரி அல்லது வாரிசு வரி இல்லாமல் இப்போது ஸ்வீடன் நன்றாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது இதுபோன்ற குழப்பங்களை விளைவித்தால் அதுவும் விவசாய நிலங்கள் நிறைந்திருக்கும் நாட்டில் அது பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடையே அண்மையில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் சாம் பிட்ராடோ கூறுகையில், இ்நதியாவில் அமெரிக்காவில் இருப்பது போல வாரிசு வரியை அமல்படுத்த வேண்டும் என்றார். ஆனால் இது இந்தியாவுக்கு ஒத்துவராது என்று கௌதம் சென் கூறியுள்ளார்.
Story written by: I.jayachandran


Click it and Unblock the Notifications