வடகிழக்கு மாநிலங்களில் அம்பானி மற்றும் அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் முதலீட்டாளர்கள் 2025 என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் என்னென்ன முதலீட்டு திட்டங்களை கையில் எடுக்கப் போகிறோம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டன.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முகேஷ் அம்பானி அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்கள் சிங்கப்பூரை போன்ற நல்ல வளர்ச்சி பெறக்கூடிய வாய்ப்பு கொண்டவையாக இருக்கின்றன என தெரிவித்தார். ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 40 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் 30,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது இதனை நாங்கள் இரண்டு மடங்காக்கி கூடுதலாக 75 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப் போகிறோம் என கூறியுள்ளார்.
மேலும் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் 45 மில்லியன் மக்களில் 2.5 மில்லியன் பேருக்கு எங்கள் நிறுவனம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரப் போகிறது என குறிப்பிட்ட அவர் ஜியோ மூலம் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்வது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இங்கிருக்கும் அனைத்து பள்ளி, மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு கொண்டு வருவது ஆகியவையே தங்களின் இலக்கு என தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாக பருப்பு, காய்கறி ,பழங்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார் .சூரிய ஒளி மின்சார உற்பத்தி மையம், உலக தரத்திலான புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றை தங்கள் நிறுவனம் வடகிழக்கு மாநிலங்களில் நிறுவும் என அவர் அப்போது உறுதியளித்தார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை வாயிலாக எட்டு வடகிழக்கு மாநிலங்களிலும் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டு இளைஞர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக் பதக்கம் வெல்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி அடுத்த 10 ஆண்டுகளில் அதானி நிறுவனம் 50000 கோடி ரூபாயை வடகிழக்கு மாநிலங்களில் முதலீடு செய்யும் என குறிப்பிட்டார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்களும் முக்கிய இடம் வகிக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை அதைத்தான் தங்கள் நிறுவனம் பின்பற்றப் போகிறது என அப்போது அவர் குறிப்பிட்டார் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் இணைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் தங்கள் நிறுவனம் கவனம் செலுத்தப் போவதாக கௌதம் அதானி உறுதி அளித்தார்.


Click it and Unblock the Notifications