இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமான ரிலையன்ஸ் குழுமத்தின் இரு பெரும் ஜாம்பவான்கள் ஆன, முகேஷ் அம்பானி, அனில் அம்பானியும் பல வருட பகையினால் பிரிந்து இருந்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.
சொத்து பிரச்சனை உள்பட பல பிரச்சனைகளை மறந்து இருவரும் ஒரே விழாவில் இணைந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகளின் பரத நாட்டிய அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். எனினும் இந்த விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அண்ணன் முகேஷ் அம்பானியும், தம்பி அனில் அம்பானியும் இணைந்து கலகலப்பாக இருக்கும் படங்கள் தான்.
தொழில் பயணம்
கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு கூட்டாக இருந்த வணிகத்தினை பிரித்து, தனி தனியாக தங்களது தொழில் பயணத்தினை இருவரும் ஆரம்பித்தனர். ஆனால் இந்த உறவில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. அண்ணன் அம்பானியோ எதை தொடர்ந்தாலும், அதில் வெற்றிகரமாக கோலோச்சினார். ஆனால் தம்பி அனில் அம்பானியோ அனைத்திலும் பின்னடைவை சந்தித்து கொண்டு இருந்தார்.
சரியான நேரத்தில் உதவி
ஒரு கட்டத்தில் பெரும் கடன் பிரச்சனையில் தவித்தார். அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில் சிறைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அனில் அம்பானியை, சரியான நேரத்தில் கடன் தொகையை செலுத்தி பெரும் பிரச்சனையில் இருந்து காப்பாற்றினார்.
நீதிமன்றம் வரை பிரச்சனை
இரு சகோதரர்களுக்கும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தாலும், எரிவாயு ஆதாயங்களுக்காக நீதிமன்றம் வரையில் சென்றனர். இப்பிரச்சனைகளுக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் இணைந்தபாடாக இல்லை.
பூஜ்ஜிய சொத்து
குறிப்பாக அனில் அம்பானி டெலிகாம் நிறுவன சொத்துகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். 42 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து மதிப்புடன் இருந்த அனில் அம்பானி, 2020ல் தனது சொத்து மதிப்பு பூஜ்ஜியம் என அறிவித்தார். இப்படி மோசமான நிலைக்கு பின்னர் அண்ணன் தம்பி இருவரும் பெரிதாக இணைந்ததாகவும் தெரியவில்லை.
மருமகளுக்காக சேர்ந்துள்ளனர்
இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகளாக வரப்போகும், ராதிகா மெர்ச்சண்டின் பரத நாட்டிய அரங்கேற்ற விழாவில் இருவரும் இணைந்துள்ள புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, பல பிரச்சனைகள், சொத்து பகை, கடன், நிதி பிரச்சனை என பிரிந்திருந்த சகோதரர்கள், தற்போது வரவிருக்கும் மருமகளுக்காக இணைந்துள்ளனர். நல்ல விஷயம் தானே.


Click it and Unblock the Notifications