இந்திய மீடியா துறையில் மாபெரும் சக்திவாய்ந்த ஒரு வர்த்தக சாம்ராஜ்ஜியம் வியாழக்கிழமை உருவாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வியாகாம்18 மீடியா மற்றும் வால்ட் டிஸ்னி ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல மாத பேச்சுவார்த்தை, பல மாத மறுசீரமைப்பு, பல மாத ஒப்புதலுக்கான போராட்டம் என வருடக்கணக்கில் முகேஷ் அம்பானி போராடி வியாழக்கிழமை தனது கனவு திட்டமான மாபெரும் மீடியா சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார்.

இன்றைய அறிவிப்பில் வியாகாம்18-க்கு சொந்தமான மீடியா மற்றும் ஜியோ சினிமா வணிகங்களை ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SIPL) உடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூவம் ரிலையன்ஸ், வியாகாம் 18, வால்ட் டிஸ்னி சொத்துக்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆக இயங்கும்.
இந்த மாபெரும் ஒருங்கிணைந்த சாம்ராஜ்ஜியத்தின் மதிப்பு சுமார் 8.5 பில்லியன் டாலராகும், இந்திய ரூபாய் மதிப்பில் 70,352 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமாக உருவெடுத்து வருடத்திற்கு 26000 கோடி வருமானம் ஈட்டும் சாம்ராஜ்ஜியமாக உருவாகியுள்ளது.
அனைத்து இணைப்புகளும், ஒப்புதல்களும் பெற்ற பின்பு இந்த அறிவிப்புகள் வெளியாகியிருக்கும் வேளையில் ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் சாம்ராஜ்ஜியத்தில் ரிலையன்ஸ் 16.34%, வியாகாம்18 46.82 சதவீதமும், டிஸ்னி 36.84 சதவீத பங்குகளையும் கொண்டு இனி இயங்கும்.
இந்த கூட்டணி நிறுவனத்தில் தலைவராக நீதா அம்பானி இருப்பார், உதய் சங்கர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டணி நிறுவனத்தின் கீழ் தற்போது 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களைும், ஜியோ சினிமா, ஹாட்ஸ்டார், கலர்ஸ், ஸ்டார் என மாபெரும் மீடியா, OTT பிராண்டுகள் வருகிறது.
ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டு முன்னணி டிஜிட்டல் தளங்களின் இணைப்பின் மூலம், 5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இந்த கூட்டு நிறுவனம் பெற்றுள்ளது. இந்த கூட்டு நிறுவனம் கிரிக்கெட், புட்பால், கபடி என முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் உரிமைகளை வைத்துள்ளது.
இந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்ய மூன்று CEO-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேவின் வாட்ஸ் பொழுதுபோக்கு பிரிவு, கிரண் மணி டிஜிட்டல் பிரிவு மற்றும் சஞ்சோக் குப்தா விளையாட்டு பிரிவு ஆகியவற்றை இனி வழிநடத்துவார்கள்.


Click it and Unblock the Notifications