சென்னை நகரம் ஏற்கனவே மழை நீரில் தத்தளித்து வரும் வேளையில் தற்போது முகப்பேர், செங்குன்றம், ஆவடி ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் சோகத்தில் உள்ளனர், இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த மழையின் காரணமாக முக்கியமான தொழிற்பேட்டைகளில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.
சென்னையில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) அதிகம் இருக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பெரும் பகுதி மிக்ஜாம் புயலால் உருவான கனமழையின் காரணமாக மழை வெள்ளத்தில் மூழ்கியது. இந்த மழையின் காரணமான இப்பகுதியில் இருக்கும் ஏராளமான தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரையில் மழை பெய்தது. இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளதோடு, மழைநீர் 4 அடி உயரத்திற்கு மேல் தேங்கியதால் பல தொழிற்சாலைகள் முடங்கியது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தென் பகுதியில் வேகமாக மழைநீர் குறைந்து, தண்ணீர் அளவு சரிய துவங்கியது. ஆனால் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதாக தெரிகிறது. மேலும் மழை நீர் முழுமையாக வடிந்தால் தான் எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளது என சரியான மதிப்பீட்டில் கணிக்க முடியும்
தோராயமாக கணக்கிட்டால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டுமே இந்த மழையால் 500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையிலும் 100க்கும் அதிகமான தொழிற்சாலைகள் நீரில் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டு உள்ளதாக முன்கணிப்புகளில் கூறப்பட்டு உள்ளது.
அம்பத்தூர், பாடி முதல் பல தொழிற்துறை பகுதிகளில் மழை வெள்ளம் இடுப்பளவுக்கு மேல் இருக்கும் காரணத்தால் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் பாழாகியுள்ளது. இதன் மூலம் டிவிஎஸ் முதல் MSME நிறுவனங்கள் வரையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் சென்னையில் இருக்கும் பெரும்பாலான ஐடி பார்க் தண்ணீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக ஏரிக்கு அருகில் இருக்கும் டெக் பார்க் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது, 2015 ஆம் ஆண்டை போல் ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும் ஐடி சேவை துறை அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் சென்னை பொருளாதாரத்தின் முக்கியமான ஆதாரம் உற்பத்தித் துறை, ஐடி துறை ஆகிய இரண்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னை நகரின் உற்பத்தி மற்றும் ஐடி சேவை துறை இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தது 2 வாரமாவது ஆகும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications