டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் இந்தியாவில் ஐடி துறையில் முன்னிலை முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் தான் இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேர் அதாவது 12,000க்கும் அதிகமான ஊழியர்களை வரும் மார்ச் மாதத்திற்குள் பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.
மனம் மாறிய டிசிஎஸ்: டிசிஎஸ் நிறுவனமே ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்தது டிசிஎஸ் ஊழியர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

சம்பள உயர்வு அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை தலைமை அதிகாரி ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து இந்த சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார். C3A கிரேடு மட்டத்திலான ஊழியர்கள் இந்த ஊதிய உயர்வை பெற இருக்கின்றனர் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. C3A கிரேடு மட்டத்திலான ஊழியர்கள் மற்றும் அதற்கு நிகரான நிலையில் பணி செய்யக்கூடிய அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் மாற்றியமைக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
80% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு:டிசிஎஸ் நிறுவனத்தின் 80 சதவீத ஊழியர்கள் இதன் மூலம் சம்பள உயர்வை பெறுவார்கள் என்றும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவித்திருக்கிறார். உங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்த டிசிஎஸ் நிறுவனத்தை இன்னும் வலுவாக்குவோம் என அந்த மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
எவ்வளவு சம்பள உயர்வு: இதன் மூலம் 80% ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் எவ்வளவு சதவிகிதம் சம்பளம் உயர்த்தப்படுகிறது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையால் அதிருப்தியிலும் குழப்பத்திலும் இருந்த டிசிஎஸ் ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு சற்றே நம்பிக்கையை தந்திருக்கிறது.
கடந்த ஆண்டு எவ்வளவு வழங்கப்பட்டது: கடந்த ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் சராசரியாக 4.5% முதல் 7% வரை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தந்தது. குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு மட்டும் இரட்டை இலக்கத்தில் சம்பள உயர்வு அளித்தது. ஐடி துறை மந்தமாக இருக்கிறது என்பதால் ஐடி நிறுவனங்கள் மிக கவனமாகவே தங்களுடைய செலவினங்களை கையாளுகின்றன. கடந்த ஏப்ரல் மாதமே டிசிஎஸ் சம்பள உயர்வை வழங்கி இருக்க வேண்டும் . ஆனால் மேக்ரோ பொருளாதார சூழலை காரணம் காட்டி சம்பள உயர்வு அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது.
பணிநீக்க நடவடிக்கை, ஐடி துறை மந்த நிலை, ஏஐ பயன்பாடு அதிகரிப்பு என அனைத்துமே தங்களுக்கு எதிராகவே நடக்கின்றன என கலக்கத்தில் இருந்த டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு சற்றே மனநிம்மதியை தந்துள்ளது.


Click it and Unblock the Notifications