விப்ரோ நிறுவனம் தனது நிறுவனத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நியமனத்தை அறிவித்திருக்கிறது. அமித் குமார் என்பவரை மேனேஜிங் பார்ட்னராகவும், உலகளாவிய கன்சல்டிங் ஹெட்-ஆகவும் நியமித்திருக்கிறது. இந்த நியமனம் விப்ரோவின் வணிகத்திற்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் பதவியேற்ற பிறகு விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீனி பாலியாவிடம் ரிப்போர்ட் செய்ய உள்ளார். ஆலோசனை சார்ந்த விஷயங்களுக்கும், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் இயங்கு தளங்களை இன்னும் வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்லவும், வாடிக்கையாளர்களை வணிகம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு வழிநடத்துவதற்கும் அமித் குமார் தலைமை தாங்கவுள்ளார்.
அமித் குமார் வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன் திறமைகளை பயன்படுத்தி ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா மற்றும் பிற தொழில் சார்ந்த விஷயங்களில் பணிபுரிய உள்ளார். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு விப்ரோ நிறுவனத்தை வளர்ச்சி அடைய வைக்கவும், மேம்படுத்தவும் வணிகங்களுக்கு உதவு உள்ளார். விப்ரோவின் தொழில்நுட்ப அனுபவத்தை கொண்டு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒவ்வொரு தொழிலுக்கும் தேவையான பிரத்தியேக தீர்வுகளையும் வழங்க அமித்தை நிறுவனம் நியமித்திருக்கிறது.

இவருடைய நியமனம் குறித்து பேசிய நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீனி பாலியா, அமித் குமாரின் முந்தைய அனுபவம், புதுமையான சிந்தனை மற்றும் அவருடைய அணுகுமுறை ஆகியவை தங்களுடைய கன்சல்டிங் பிரிவை அற்புதமான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்லும் என்றும், விப்ரோவின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க உதவும் என்றும் கூறினார்.
விப்ரோ நிறுவனம் அசெஞ்சர் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தும் கன்சல்டிங் வணிகத்தில் தனது இருப்பை வலுப்படுத்த ஈடுபட்டு வருகிறது. இதனால் சில கையகப்படுத்தல் முயற்சிகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது அமித் குமாரை கன்சல்டிங் வணிகத்தின் தலைவராக நியமித்திருக்கிறது.
மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட ஐடி சேவைகள் ஆலோசனை நிறுவனமான அப்ளைடு வேல்யூ டெக்னாலஜிஸை விப்ரோ டிசம்பர் மாதம் சுமார் $40 மில்லியனுக்கு வாங்கியது. விப்ரோ நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு அமித் குமார் அசெஞ்சர் கன்சல்டிங் மேனேஜிங் டைரக்டராக பணிபுரிந்தார். அங்கு இவர் கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்க சந்தை மற்றும் இண்டஸ்ட்ரி எக்ஸ் கன்சல்டிங்கிற்கு தலைமை தாங்கியது உட்பட பல பணிகளை செய்துள்ளார்.
அமெரிக்கா சந்தையில் அசெஞ்சர் நிறுவனத்தின் வணிகத்தையும் வழிநடத்தினார். தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிகங்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை எப்படி பயன்படுத்துவது என்ற ஆலோசனையும் வழங்கி வந்தார்.


Click it and Unblock the Notifications