பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் மகளின் கணவரும் பிரபல டிராக்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனருமான நிகில் நந்தா மீது மோசடி மற்றும் டிராக்டர் ஏஜென்சி உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது வர்த்தக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு குறித்து பார்ப்போம். உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங். இவர் தனது வர்த்தக கூட்டாளியான லல்லா பாபுவுடன் சேர்ந்து டேட்டாகஞ்சில் ஜெய் கிசான் டிரேடர்ஸ் என்ற டிராக்டர் ஏஜென்சி நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக லல்லா பாபு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜிதேந்திர சிங் தனி ஒருவனாக டிராக்டர் ஏஜென்சியை நடத்தி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், டிராக்டர் நிறுவன அதிகாரிகள் விற்பனை அதிகரிக்கும்படி ஜிதேந்திர சிங்குக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.
மேலும் டிராக்டர் டீலர்ஷிப் உரிமத்தை ரத்து செய்துவிடுவோம் என்றும் அவரை நிறுவன அதிகாரிகள் மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த ஜிதேந்திர சிங் தனது கவலையை குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.
2024 நவம்பர் 21ம் தேதியன்று, டிராக்டர் நிறுவனத்தின் ஒரு சில நிறுவன அதிகாரிகள் ஜிதேந்திர சிங்கை சந்தித்து விற்பனையை அதிகரிக்க அழுத்தம் கொடுத்துள்ளனர். அதற்கு அடுத்த நாள் (நவ.22) ஜிதேந்திர சிங் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து பாப்பாத் ஹம்சாபூர் கிராமத்தில் வசித்து வரும் ஜிதேந்திர சிங்கின் சகோதரர் ஞானேந்திரா, டிராக்டர் நிறுவன அதிகாரிகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் இது தொடர்பாக அவர்கள் புகார் கொடுத்தனர். நீதிமன்ற உத்தரவையடுத்து, ஞானேந்திரா கொடுத்த புகார் தொடர்பாக டேட்டாகஞ்ச் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டிராக்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக இருக்கும் நிகில் நந்தா, நிறுவனத்தின் உ.பி. தலைவர், பகுதி மேலாளர், விற்பனை மேலாளர், ஷாஜகான்பூர் வியாபாரி மற்றும் 3 அதிகாரிகள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மீதும் மோசடி மற்றும் ஜிதேந்திர சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications