இந்தியாவில் பணவீக்கத்தை குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வந்ததன் மூலம் மீண்டும் வங்கி வைப்பு நிதி திட்டங்கள் பிரபலமாக துவங்கியுள்ளது.
கொரோனா காலத்தில் ரெப்போ விகிதம் மிகவும் குறைவாக இருந்த வேளையில் வைப்பு நிதியில் முதலீட்டு செய்வோர் எண்ணிக்கையும், அளவும் பெரிய அளவில் குறைந்தது. இதனால் பல வங்கிகளில் கடன் கொடுக்கவும், தினசரி பரிவர்த்தனைக்கும் நிதி ஆதாரங்கள் இல்லாத நிலைகூட சில காலக்கட்டத்தில் உருவானது மறக்க முடியாது.

இந்த நிலையில் தற்போது நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி மே 2022 முதல் சுமார் 250 அடிப்படை புள்ளிகளை ரெப்போ விகிதத்தில் உயர்த்தியுள்ளது. இதனால் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வெற்றிகரமான திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது மூத்த குடிமக்கள் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கு 7.6 சதவீத வட்டி விகிதமும், மற்றவர்களுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும் அம்ரித் கலாஷ் என்ற ரீடைல் டெர்ம் டெபாசிட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. அம்ரித் கலாஷ் திட்டம் என்பது 400 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட சிறப்பு திட்டமாகும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அம்ரித் கலாஷ் திட்டத்தை இதற்கு முன் பிப்ரவரி 15, 2023 அன்று அறிமுகப்படுத்தி, மார்ச் 31, 2023 வரையில் மட்டுமே நடைமுறையில் இருந்தது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி ஏப்ரல் 12 அன்று இந்தத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது, இது ஜூன் 30, 2023 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் முதலீட்டாளர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

2 கோடி ரூபாயைக்குக் குறைவான என்ஆர்ஐ ரூபாய் டெர்ம் டெபாசிட்கள் உட்பட உள்நாட்டு ரீடைல் டெர்ம் டெபாசிட்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். எஸ்பிஐ இணையதளத்தின்படி, 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட அம்ரித் கலாஷ் திட்டத்திற்கு 7.10 சதவீத வட்டி விகிதத்திலும், மூத்த குடிமக்கள் 7.60 சதவீத வட்டி விகிதத்திற்கு டெபாசிட் செய்ய முடியும்.
அம்ரித் கலாஷ் திட்டத்தில் முதலீடு செய்வோர் தங்களுடைய வட்டி வருமானத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர அடிப்படையில் பெறலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு TDS உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம். அம்ரித் கலாஷ் திட்ட முதலீட்டில் இருந்து கடன் கூட பெறலாம்.


Click it and Unblock the Notifications