சென்னை: இந்தியர்களின் தினசரி உணவில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் முக்கிய ஆதாரமாக பால் விளங்குகிறது. சிலர் காலை நேரங்களில் காபி, பால் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஒருவேளை டீ, காபி குடிக்கவில்லை என்றாலும் சிலருக்கு வேலையே ஓடாது. அந்த அளவு மக்கள் மத்தியில் பாலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இது போன்ற நபர்களுக்கு, இந்த செய்தி சற்று கசப்பாகத்தான் இருக்கும். அது என்னவென்றால் அமுல் நிறுவனம் பால் விலையை ரூ. 2 ரூபாய் ஏற்றியுள்ளது.
அமுல் பிராண்ட் குஜராத் மாநிலத்தை தலைமையகமாகக் கொண்டு, இந்தியா முழுவதும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அமுல் தயாரிப்புகளின் சுவை, தரம் தொடர்ந்து மெயின்டெயின் செய்யப்படுவதால், இந்தியாவில் பலரும் விரும்பப்படும் பிராண்டாக உள்ளது. அமுல் என்ற பிராண்டின் கீழ் பால் மற்றும் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF), நாடு முழுவதும் உள்ள அனைத்து சந்தைகளிலும் ஜூன் 3, 2024 முதல் பாலின் விலையை லிட்டருக்கு ரூ. 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.

இந்த விலை உயர்வின் மூலம் அமுல் கோல்டு மற்றும் அமுல் தாசாவின் விலை லிட்டருக்கு ரூ. 2 ரூபாயும், அமுல் எருமை பால் லிட்டருக்கு ரூ. 3 ரூபாயும், மீதமுள்ளவை லிட்டருக்கு ரூ. 1 ரூபாய் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான லாபம் வழங்குதல் போன்றவை, இந்த விலை ஏற்றத்திற்கான காரணங்களாக அமுல் நிறுவனம் கூறியுள்ளது. இதன் காரணமாக அமுல் எருமை பால் ஒரு லிட்டர் ரூ.73 ஆகவும், பசும்பால் லிட்டருக்கு ரூ. 58 ஆகவும் அதிகரித்துள்ளது.
புதிய கட்டணங்கள்: சமீபத்திய விலை உயர்வு மூலம், அமுல் கோல்டு அரை லிட்டர் பாக்கெட்டின் தற்போதைய MRP விலை ரூ.34 ரூபாயாக உள்ளது. இது முன்பு ரூ. 33க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.68 க்கு விற்கப்பட உள்ளது. இது முன்பு ரூ. 66க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, அமுல் பசும்பாலின் அரை லிட்டர் பாக்கெட் ரூ.28க்கு பதிலாக ரூ.29க்கும், அதன் ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.56க்கு பதிலாக ரூ.57க்கும் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல. அமுல் தாசாவின் அரை லிட்டர் விலை முன்பு ரூ. 27 ரூபாயாக இருந்தது. இப்போது ரூ. 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதன் ஒரு லிட்டர் பேக் தற்போதைய விலை ரூ. 56 ரூபாய். இது முன்பு ரூ. 54 ரூபாயாக இருந்தது.
அமுல் ஸ்லிம் என் டிரிம் பாலின் அரை லிட்டர் விலை 25 ரூபாயாகவும், ஒரு லிட்டர் விலை 49 ரூபாயாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications