அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள ஒரு தன்னார்வ நிறுவனம் தங்களிடம் இருந்த காலிப்பணிக்கு விண்ணப்பங்களை கோரி இருந்தது. இதைப் பார்த்த ஒருவர் அந்த வேலைக்காக விண்ணப்பத்தை அனுப்பினார். ஆனால் அவர் அந்த வேலைக்குத் தேர்வு செய்யப்படவில்லை.
மாறாக அவருக்கு அந்த நிறுவனம் அளித்த பதில் மெயில் மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. பதில் மெயிலில், 'நிராகரிக்கப்பட்டீர்கள்' என்று ஒற்றை வார்த்தை மட்டுமே இருந்தது.

மெயிலின் தொடக்கத்திலும் சரி, முடிவிலும் சரி எந்தவித மரியாதை நிமித்தமான வார்த்தைப் பரிவர்த்தனைகள் எதுவுமே இல்லை. வெறுமனே நிராகரிக்கப்பட்டது என்று இருந்தது. அவ்வளவுதான் வேறு எந்த விவரமோ அல்லது காரணங்களோ மெயிலில் குறிப்பிடப்படவில்லை.
இதைப் பார்த்து அந்த மனிதர் ரொம்பவே நொந்து போய் விட்டார்.
இதுவரை எனது வாழ்க்கையில் இப்படியொரு நிராகரிப்பு பதிலை பெற்றதே இல்லை. இது அராஜகமில்லையா? ஒரு புரொபஷனல் பதிலா இது? என்று வருத்தத்துடன் அந்த பாதிக்கப்பட்டவர் ரீடிட் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு 54,000க்கும் மேலான ஆதரவு பதிவுகளும் ஏராளமான கருத்துகளும் பகிரப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.

அத்துடன் இந்த பதிவு வைரலாகி விட்டது. ஆளாளுக்கு வறுத்தெடுக்க ஆரம்பித்ததால் எங்கே தங்களது பேரும் புகழும் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் அந்த நிறுவனம் மன்னிப்புக் கோரும் அளவுக்கு இறங்கி வந்து விட்டது.
பாதிக்கப்பட்டவர் இட்ட பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக அந்த நிறுவனமும் விளக்கம் அளித்திருந்தது. அதில்,எங்கள் நிறுவனத்தின் ஆன்லைன் ஆட்சேர்ப்பு சாப்ட்வேரில் ஒரு பிழை ஏற்பட்டுள்ளது. இதை நாங்கள் சமீபத்தில் தான் அறிந்தோம். விண்ணப்பதாரர்களின் தகுதி சரியில்லை என்றால் அந்த சாப்ட்வேர் உடனடியாக அவர்களுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் தந்து விடுகிறது.
இப்படிச் செய்யக் கூடாது. இதனால் விண்ணப்பதாரர்களுக்கு வருத்தம் வந்து விடும். தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்களுக்கு பொருத்தமான, கண்ணியமான விளக்கத்தையும் பதிலையும் தரவேண்டியது எங்களது கடமை. ஆனால் இப்படிப்பட்ட சாப்ட்வேரினால் ஏற்பட்ட தவறுக்கு நாங்கள் வருந்துகிறோம். இந்த தவறுக்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
இனி இதுபோல் மீண்டும் நடக்காது. சாப்ட்வேரின் பிரச்னையை சரிசெய்துவிடுவோம் என்று அந்த நிறுவனம் பாதிக்கப்பட்ட நபரிடம் மன்னிப்பு கோரியது. இதைத் தொடர்ந்து அந்தப் பயனர் பதிவிட்ட பதிலில், வெளிப்படையாக எனது பதிவு பல அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. அதை நிறுவனம் புரிந்து கொண்டது.
இந்த நிறுவனம் என்னிடம் மன்னிப்பு கேட்டதுபோல் எனக்காக ஆதரவு குரல் தந்தவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இதற்காக எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. எனக்கு நேர்ந்த தவறு சாப்ட்வேர் டெக்னாலஜி பிழை என்று தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவில் பலரும் ஏஐ தொழில்நுட்பம், ஆட்டோமேஷன் பணிகளை அதிகம் நாடியிருந்தால் இப்படி தான் அசிங்கப்பட வேண்டும் என கமெண்ட் செய்திருந்தனர்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications