ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு 65 ஆயிரம் டாலர்களை போனஸாக வழங்கியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 54 லட்சம் ரூபாய் ஆகும்.
மொத்தம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 330 ஊழியர்களுக்கும் சேர்த்து இந்த நிறுவனம் 22 மில்லியன் டாலர்களை போனஸ் தொகையாக மட்டும் வழங்கியிருக்கிறது. சிட்னியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் தான் ஏர் டிரங்க் (air trunk). டேட்டா ப்ராசசிங் பிரிவில் செயல்படக்கூடிய இந்த நிறுவனம் அண்மையில் தான் அமெரிக்காவை சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக் ஸ்டோனுடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

அதாவது பிளாக் ஸ்டோன் நிறுவனம், ஏர் ட்ரங்க் நிறுவனத்தை 24 பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறது. இந்த விற்பனை மூலம் கிடைத்த தொகையை நிறுவனம் ஊழியர்கள் அனைவருக்கும் பிரித்து போனஸ் தொகையாக வழங்கியுள்ளது.
இதன்படி ஒவ்வொரு ஊழியர்களும் தலா 65 ஆயிரம் டாலர்களை போனஸ் தொகையாக பெற்றனர். ஏர் டிரங்க் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களின் டிஜிட்டல் தகவல்களை பாதுகாக்கும் பெரிய அளவிலான டேட்டா மையங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான ராபின் கூடா தன்னுடைய நிறுவனத்தின் லாபத்தை ஊழியர்களுக்கு பகிர்ந்து வழங்குவதில் புகழ்பெற்றவர். அண்மையில் கூட நிறுவன ஊழியர்கள் அனைவரையும் இலவசமாக பாலிக்கு சுற்றுலாவுக்கு அழைத்து சென்றிருந்தார். ஏர் டிரங்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராபின் கூடா ஆஸ்திரேலியாவின் பணக்கார தலைமை செயல் அதிகாரிகளுள் ஒருவர்.
இந்நிறுவனம் ஆஸ்திரேலியா ,மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் 11 இடங்களில் டேட்டா மையங்களை நிறுவியுள்ளது. இந்த நிறுவனம் கூகுள் , மைக்ரோசாப்ட் , அமேசான் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்கு தேவையான டேட்டா சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் தான் ராபின் கூடா ஏர் டிரங் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக மாற வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என தெரிவித்துள்ளார்.
தற்போது 24 பில்லியன் டாலர் என்ற மதிப்பை எட்டி இருப்பதாகவும் கூடிய விரைவில் 100 பில்லியன் என்ற அளவை எட்டி விடுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் டெக் நிறுவனங்கள் தற்போது ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா செண்டர்கள் ஆகியவற்றில் தான் கவனம் செலுத்துகின்றன. எனவே இந்த துறைகளில் இயங்கும் ஸ்டார்ட் அப்கள் எல்லாமே வளர்ச்சி பாதையில் தான் இருக்கும் என கணிக்கப்படுகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications