டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நமது தொழில்கள் இயங்கும் போக்கையே மாற்றி அமைத்து விட்டன. பெரும்பாலான சிறு நிறுவனங்களுக்கு எல்லாம் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்டவை உலக சந்தைக்கான நுழைவாயிலாக இருக்கின்றன. ஆனால் அவையே இந்த சிறு நிறுவனங்களை அழிப்பவையாகவும் மாறி விட்டன.
இப்படி ஆன்லைன் தளத்தில் பொருட்களை விற்று ஒரு நாளைக்கு 20 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டிய நிறுவனம் தற்போது பூஜ்யம் என்ற நிலையை எட்டி இருக்கிறது.

கிரேப்வைன் தளத்தில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனர் தன்னுடைய சோக கதையை பகிர்ந்து தொழில் தொடங்க விரும்பும் அனைவரும் கட்டாயம் இதனை படிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த நபர் 2017 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டிற்கு அலமாரிகள், டிராயர்கள் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும் என ஆன்லைனில் தேடியுள்ளார். ஆனால் அவை அனைத்தும் ஆன்லைனில் அதிக விலைக்கு விற்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை தொழில் வாய்ப்பாக எடுத்து கொண்ட அவர் முதல்கட்டமாக 2.5 லட்சம் ரூபாய்க்கு 300 ஸ்டோரேஜ் யூனிட்டுகளை வாங்கி அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்துள்ளார் .அவை அனைத்தும் 50 மணி நேரங்களிலேயே விற்று விட்டதாம்.
இதனால் உற்சாகமடைந்த அவர் அடுத்ததாக 7.5 லட்சம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கி கையிருப்பு வைத்து விற்பனை செய்திருக்கிறார் . கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிலேயே அவருடைய நிறுவனம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்கள் வாயிலாக ஒரு நாளைக்கு 20 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனமாக மாறியிருக்கிறது.
ஆனால் இவருடைய விற்பனை வெற்றியை அறிந்து கொண்ட அமேசான் நிறுவனம் போட்டியாக ஒரு பிராண்டை உருவாக்கி இவருடைய நிறுவனத்தில் என்னென்ன பொருட்கள் எல்லாம் விற்பனையாகிறதோ அதையே தங்களின் பிராண்ட் பெயரில் விற்பனை செய்துள்ளது.
இதனால் அமேசான் போன்ற இகாமர்ஸ் தளங்களில் இவருடைய பொருட்கள் காட்டப்படும் விகிதமும் குறைந்து வருமானமும் குறைந்துவிட்டதாம். தற்போது ஒரு நாளைக்கு ஒரு விற்பனை கூட நடப்பதில்லை என கூறுகிறார்.
முதல் கட்டமாக அமேசான் தளம் தனக்கு டாப் செல்லர் என்ற அந்தஸ்தை வழங்கியதோடு மட்டுமில்லாமல் தங்களின் விற்பனையாளர்களுக்கான மாநாடுகளில் கூட அழைப்பு விடுத்து பேச வைத்தது, ஆனால் நிலைமை தற்போது தலைகீழாகிவிட்டது. குறுகிய காலத்திலெயே தொழிலில் பெரிய வளர்ச்சியையும் சரிவையும் கண்டுவிட்டேன் என கூறியுள்ளார்.
இவ்வாறு இவருடைய தொழில் நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் பல்வேறு நிறுவனங்களும் தொழிலை வாங்குவதற்கும் இவருடன் இணைந்து செயல்படுவதற்கு முன் வந்த போது இவர் அமேசான் தளத்தில் தனக்கு நல்ல விற்பனை இருக்கிறது என்பதை காரணமாக கொண்டு அனைத்தையும் நிராகரித்து விட்டாராம்.
ஆனால் அதுதான் தான் தான் செய்த மிகப்பெரிய தவறு என்பதை தற்போது உணர்ந்திருப்பதாக அவர் கூறுகிறார். நீங்கள் ஒரு தொழிலை செய்கிறீர்கள் அல்லது ஒரு பொருளை விற்பனை செய்கிறீர்கள் என்றால் முழுக்க முழுக்க ஒரே ஒரு தளத்தை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது இருக்கக்கூடிய அனைத்து தளங்களையும் பயன்படுத்தி விற்பனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் நீங்கள் ஒரு நிறுவனத்தை தொடங்கி அது நல்ல வளர்ச்சி அடைகிறது அப்பொழுது ஒரு பெரிய நிறுவனம் உங்கள் நிறுவனத்தை வாங்க முயற்சி செய்கிறது என்றால் அதனை விற்று விடுவது தான் புத்திசாலித்தனமான முடிவு இல்லை எனில் உங்களுடைய ஐடியாவை பின்பற்றி பெரிய நிறுவனங்கள் எளிதில் லாபமீட்டி விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல சுய தொழிலில் ஈடுபடக்கூடிய நபர்கள் அவசரக்கால நிதியாக ஒரு தொகையை எடுத்து சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் இதுபோன்ற திடீர் சரிவுகளின் போது அவை நம்மை பாதுகாக்கும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications