நேற்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் 2024-இன் மீதான எதிர்ப்பையும், பொதுமக்களின் கோபத்தையும் மீறி, தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா, நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பட்ஜெட்டின் அறிவிப்புகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆனந்த் மகேந்திரா தனது அதிகாரபூர்வ X தளத்தில், மும்பை விமான நிலையத்தில் வெறும் 600 பணியிடங்களுக்காக 25,000 நபர்கள் மும்பை விமான நிலையத்தில் குவிந்த போட்டோவை போஸ்ட் செய்து, பட்ஜெட்டில் வெளியான வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
மும்பை விமான நிலையத்தில் 600 வேலைக்கு 25,000 பேர் விண்ணப்பித்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ X தலத்தில் பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா, "இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் உலகே பொறாமைப்படும் வகையில் உள்ளது.

நம்முடைய எதிர்காலத்தில் உலகம் நம்பிக்கை கொண்டுள்ளதால், முதலீட்டிற்கான சிறந்த இலக்காக நாம் இருக்கிறோம். ஆனால், இந்த வளர்ச்சியுடன் வேலைவாய்ப்புகளும் உருவாக வேண்டும் என்பது தான் நமக்கு முன்னால் உள்ள முக்கிய பணியாகும்.
நேற்றைய பட்ஜெட்டில் அரசு இந்த விஷயத்தை முக்கிய பணியாகக் கருதுகிறது என்பதற்கான வலுவான சான்றுகள் காணப்பட்டன. இளைஞர்களை அதிக அளவில் வேலைவாய்ப்புக்கு தயார்படுத்துவது வேலைவாய்ப்பை உருவாக்குவதைப் போலவே மிகவும் முக்கியமானது.
வேலை வாய்ப்பு குறித்து அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் செயல்முறைகள் நம்பிக்கைக்குரியவை. ஆனால், இந்த திட்டங்கள் சரியாக செயல்படுகிறதா? என்பதை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதன் பின் தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

தனியார் துறையும் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்ய வேண்டும். இந்த பணியில் நாம் அனைவரும் இணைந்து செயல்படாவிட்டால் அனைத்தும் சாதகமற்றதாக மாறிவிடும் என்று கூறி பதிவிட்டுள்ளார்.
வேலை வாய்ப்பு குறித்தத் திட்டங்கள்: புதிதாக பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்குதல், உற்பத்தித் துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் மற்றும் 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களை திறன்படுத்துதல் போன்ற வேலைகளை உருவாக்கும் திட்டங்கள் குறித்து ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். 2 லட்சம் கோடி செலவில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இந்தத் திட்டங்களின் நோக்கமாகும்.


Click it and Unblock the Notifications