இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த மஹிந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர், ஹைதராபாத்தில் அமைந்துள்ள மஹிந்திரா பல்கலைக்கழகம் நடத்தி வருவது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.
சுமார் 4000 மாணவர்கள் படிக்கும் இந்த கல்லூரிக்கு தற்போது ரூ.500 கோடிக்கும் மேற்பட்ட நிதியை வழங்க உறுதி செய்துள்ளது ஆனந்த மஹிந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர். ஆனந்த மஹிந்திரா தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2025 நிதியாண்டு முதல் 2029 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த 500 கோடி ரூபாய் நிதி பல்கலைக்கழகத்தில் பல்வேறு முக்கிய பணிகளுக்காக முதலீடு செய்யப்பட உள்ளது. புதிய கோர்ஸ்களை சேர்ப்பதில் துவங்கி பல்கலைக்கழகத்தைச் சிறப்பு மையமாக மாற்றுவதற்கும் இந்த முதலீடு ஆனந்த மஹிந்திரா மற்றும் அவரது குடும்பத்தால் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர், மஹிந்திரா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான இந்திரா மஹிந்திரா கல்விப் பள்ளிக்காகத் தனிப்பட்ட முறையில் ரூ.50 கோடி வழங்க உறுதி செய்துள்ளார். இந்திரா மஹிந்திரா, ஆனந்த மஹிந்திராவின் தாயார் ஆவார், இவர் ஒரு ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திரா மஹிந்திராவின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்தப் பள்ளி, கல்வி ஆராய்ச்சி மற்றும் புதுமை ஆகிய துறைகளில் சிறந்து விளங்க முயற்சித்து வருகிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஒட்டுமொத்த பல்கலைகழத்தின் தரத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துதல் மற்றும் ஒவ்வொரு கல்லூரிக்கும் உயர்ந்த தரத்திலான வசதிகளை உறுதி செய்வதற்காக இந்த ஆண்டுக்கு மட்டும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.
மஹிந்திரா பல்கலைக்கழகம் (MU) 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் டெக் மஹிந்திராவின் முன்னாள் துணைத் தலைவர் வினீத் நாயரின் முயற்சியில் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகம் தற்போது இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளில் நான்கு மையங்கள் மூலமாக 35 படிப்புகளை வழங்குகிறது. மேலும் மஹிந்திரா கல்வி நிறுவனத்தின் கீழ் ஐந்து பள்ளிகள் இயங்கி வருகிறது.
2024-25 ஆம் ஆண்டில், ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் பள்ளி உட்பட இரண்டு கூடுதல் கல்லூரிகளை நிறுவப்பட உள்ளன. முதுநிலை படிப்பில் சுமார் 10 சதவீதம் பேர் என, 4,100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மஹிந்திரா பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications