இந்திய தொழில் துறையின் முக்கிய புள்ளியாக இருந்த வினீத் நாயர் அவர்கள் வியாழக்கிழமை தனது 85 வயதில் காலமானார். இவரது மறைவு தொழில் துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் வினீத் நாயரைப் பற்றி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா செய்த ட்விட்டர் பதிவில், "இன்று காலை வினீத் நாயர் அவர்கள் மறைந்த செய்தியைத் தெரிவிப்பதில் வருந்துகிறேன். இந்திய தொழில் துறையில் மிகவும் செல்வாக்குமிக்க ஆளுமை கொண்டவர் வினீத் நாயர். சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து பின்னர் உலக வங்கியில் பணியாற்றிய அவர், கெயில் (GAIL) நிறுவனத்தின் முதல் தலைவராக ஆனார்." என்று குறிப்பிட்டுள்ளார்.

"அதனைத் தொடர்ந்து, அவர் தனது வெற்றிகரமான பயணத்தை தனியார் துறைக்கு மாற்றிக் கொண்டு அதிலும் மாபெரும் வெற்றியை கண்டார். அரசு பணியில் இருந்து வெளியேறிய வினீத் நாயர் ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

அதன் பிறகு, அவரும் அவரது இரண்டு நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து மஹிந்திரா பிரிட்டிஷ் டெலிகம்யூனிகேஷன் (Mahindra British Telecom) நிறுவனத்திற்கு வந்தார்கள். அவர்களை நாங்கள் "Three Musketeers" என்று அன்புடன் அழைத்தோம்!" என்று ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில் நினைவு கூர்ந்துள்ளார்.

"மஹிந்திரா பிரிட்டிஷ் டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு வரும்போதே மூவரும் ஸ்டார்ட்அப் போன்ற உத்வேகத்துடன் வந்தனர். மஹிந்திரா பிரிட்டிஷ் டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்தை இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாற்றுவதற்கான உறுதியுடன் அவர்கள் வந்து, சாதித்தும் காட்டினார்கள். இந்த நிறுவனம் தான் பின்னாளில் டெக் மஹிந்திரா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது." என்று ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.
"குறிப்பாக, வினீத் நாயர் தலைமையில் நடத்தப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ்-ன் துணிச்சலான கையகப்படுத்துதல் மஹிந்திரா குழுமத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமானது." என்று ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.
"எனது தனிப்பட்ட வாழ்க்கையில், சத்யம் கம்ப்யூட்டர் வளாகத்தில் மஹிந்திரா பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான அவரது தொலைநோக்குப் பார்வைக்காக நான் என்றும் அவருக்கு கடமைப்பட்டிருப்பேன். நம் குழுமத்தின் மிக முக்கியமான பிரிவாக இதுவும் இருக்கும் என்று அவர் எங்களை தூண்டினார்." என்று ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில் கடந்த கால முக்கிய நிகழ்வுகளை தொகுத்து எழுதினார்.
இறுதியாக ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில் வினீத், உங்களின் ஞானத்திற்கும், உங்கள் தலைமைக்கும், உங்கள் தொழில் வாழ்க்கையின் பெரும் பகுதியை மஹிந்திரா குழுமத்திற்கு அர்பணித்ததற்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் நட்புக்கு நன்றி.
நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் வாழ்வீர்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications