பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள், பெரு நிறுவனங்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றன. இதனால் மக்கள் மாற்று வழிகளை தேடி வருகின்றனர். இந்த சூழலில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கும் ஆனந்த் மஹிந்திரா, ஏர் கண்டிஷ்னர்களில் இருந்து வடியும் தண்ணீரை சேமிப்பது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பலரது கவனத்தை பெற்றுள்ளது.

ஏசி யூனிட்களில் இருந்து தினமும் தண்ணீரை சேகரிக்கும் எளிய பயனுள்ள முறை அந்த வீடியோவில் உள்ளது. ஏசி யூனிட்டின் கன்டென்சுடு வடிகாலில் ஒரு குழாய் இணைக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் தண்ணீர் சேகரிப்புத் தொட்டியில் சேர்கிறது. இந்தியா முழுவதும் மக்கள் எங்கெல்லாம் ஏ/சி பயன்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் வடியும் நீரை இவ்வாறு பத்திரமாக சேமித்து வைக்க வேண்டும் என ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
பெங்களூரு, சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாறுபாடு என பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் தண்ணீர் பிரச்சினையை கையாள வேண்டிய நிர்பந்தம் பெங்களூருவுக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை, அதிக விலை கொடுத்து லாரி தண்ணீர் வாங்க வேண்டிய நிலை என மக்கள் பாடுபட்டு வரும் நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தண்ணீர் நெருக்கடி இல்லை என்று மறுத்துள்ளார்.
பெங்களூருவைப் பொறுத்தவரை, தண்ணீர் நெருக்கடி இல்லை 7,000 ஆழ்துளை கிணறுகள் மட்டுமே வறண்டுள்ளன, அவற்றுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளோம் என கூறியுள்ளார். தண்ணீர் டேங்கர்களின் கட்டுப்பாடு அரசிடம் இருப்பதாகவும், நீர் ஆதாரங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அனைவருக்கும், முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதை அரசு உறுதிப்படுத்தும் என்றார்.
ஆனால் மக்களின் நிலைமை இதற்கு மாறாக இருக்கிறது. போதிய தண்ணீர் கிடைக்காமல் மாற்று வழிகளை மக்கள் நாடுகின்றனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெரும்பாலானவர்கள் வொர்க் ஃபிரம் ஹோம் கேட்டு ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் டிஸ்போசபில் தட்டு, டம்ளர் போன்றவற்றை பயன்படுத்தி முடிந்த அளவு நீர் பயன்பாட்டை குறைத்து வருகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications