மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப்புக்கு மாற்றாக, இந்திய மென்பொருள் நிறுவனமான ஜோஹோ (Zoho) உருவாக்கிய 'அரட்டை' (Arattai) என்ற குறுஞ்செய்தி சமீப காலமாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தான், மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அரட்டை செயலிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில், ஆனந்த் மஹிந்திரா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "இன்று நான் 'அரட்டை' செயலியை பெருமையுடன் பதிவிறக்கம் செய்தேன்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு அந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலளித்துள்ளார்.

ஸ்ரீதர் வேம்புவின் பதிவில், "நாங்கள் எங்கள் தென்காசி அலுவலகத்தில் 'அரட்டை' பொறியாளர்களுடன் செயலியின் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, குழு உறுப்பினர் ஒருவர் இந்த பதிவை காட்டினார். ஆனந்த் மஹிந்திரா, உங்கள் ஆதரவுக்கு நன்றி. இது எங்களுக்கு மேலும் ஊக்கத்தையும், உறுதியையும் அளிக்கிறது" என்று பதிலளித்துள்ளார். மேலும், இதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, "நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் அரை பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் என்ற உலகளாவிய நிறுவனத்தின் ஆதிக்கத்திற்கு 'அரட்டை' செயலி கடுமையான போட்டியாளராக உருவெடுத்துள்ளது. சமீப நாட்களாக 'அரட்டை' செயலியின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
ஸ்ரீதர் வேம்புவின் கூற்றுப்படி, வெறும் 3 நாட்களுக்குள் இந்த செயலியின் பயன்பாடு 100 மடங்கு அதிகரித்திருக்கிறது. புதிய பயனர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 3,000-இல் இருந்து 3,50,000 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'அரட்டை' செயலி இலவசமானது என்றும் இதை பயன்படுத்துவது மிகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த செயலி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். எனவே, இந்தியர்கள் அனைவரும் அரட்டை செயலியை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
'அரட்டை' செயலியின் சிறப்பம்சம் : இந்த 'அரட்டை' செயலி, வாட்ஸ் அப்பை போலவே பல வசதிகளை வழங்குகிறது. டெக்ஸ்ட், வாய்ஸ் மெசேஜ், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், புகைப்படம், வீடியோ மற்றும் ஆவணங்களை பகிர்தல், ஸ்டோரி, குழுக்கள், சேனல்கள் என அனைத்து வசதிகளுமே இதில் உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் டெஸ்க்டாப்கள் என ஒரே நேரத்தில் 5 சாதனங்கள் வரை கூட இதை பயன்படுத்த முடியும்.
மேலும், வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, விளம்பரங்களுக்காக பயனர்களின் தரவை பகிர்வதாக கூறப்படுகிறது. ஆனால், 'அரட்டை' செயலியோ தனது பயனர் தரவுகள் அனைத்தையும் இந்தியாவுக்குள்ளேயே உள்ள டேட்டா மையங்களில் பாதுகாப்பாக சேமித்து வைக்கிறது.


Click it and Unblock the Notifications