பொதுவாக ஏடிஎம்களில் பணம் மட்டும்தான் வரும் என்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம்
ஆனால் பெங்களூரிலுள்ள ஏடிஎம்மில் சுடச்சுட இட்லி வருவது அந்நகர மக்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
இதுகுறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்.
இட்லி ஏடிஎம்
இனி இட்லி வாங்க வேண்டுமென்றால் ஓட்டலுக்கு சென்று காத்திருந்து வாங்க வேண்டியதில்லை. ஏடிஎம்மில் பணம் போட்டால் ஆட்டோமேட்டிக்காக இட்லி மற்றும் அதற்கு தொட்டுக்கொள்ள சட்னி ஆகியவை வருகிறது. இந்த வித்தியாசமான ஏடிஎம் பெங்களூரில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனந்த் மஹிந்திரா
இந்த இட்லி ஏடிஎம் குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஆச்சரியமாக பதிவு செய்துள்ளார். பெங்களூரில் உள்ள தானியங்கி இட்லி தரும் இயந்திரம் ஆன்லைனில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை அறிந்தேன். இது ஒரு உலகளாவிய வாய்ப்பாக நான் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உலக அளவில் ஏற்றுமதி
இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் விரைவில் உலக அளவில் இந்த இட்லி இயந்திரத்தை தயாரித்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இயந்திரத்திலிருந்து இட்லிகள் எப்படி உருவாகிறது? அதன் சுவை மற்றும் தரம் எந்த அளவில் எந்த அளவுக்கு இருக்கிறது? என்றும் அவர் பெங்களூர்வாசிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கலாச்சார ஏற்றுமதி
வெளிநாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் மால்களில் இட்லி உள்பட இந்திய உணவுகளை வழங்கும் இயந்திரங்களை நான் விரைவில் பார்க்க விரும்புகிறேன் என்றும் இது ஒரு கலாச்சார ஏற்றுமதி ஆக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கமெண்ட்ஸ்
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்களின் இந்த பதிவிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் கமெண்ட்ஸ் ஆக பதிவாகி வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தில் வரும் இட்லியின் சுவை நம் வீட்டில் செய்யும் இட்லிக்கு இணையாக இல்லை என்றும் மேலும் விலை அதிகமாக உள்ளது என்றும் ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் ஒருவர் தனது மகள் உடல்நிலை சரியில்லாதபோது இரவில் இட்லி வாங்க விரும்பியதாகவும் ஆனால் உணவகங்கள் எதுவும் திறக்கவில்லை என்றும் 24 மணி நேரமும் சுடச்சுட இட்லி கிடைக்கும் இயந்திரம் உண்மையிலேயே மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications