குஜராத்: ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி தனது திருமணத்தையொட்டி கோயில்களுக்கு சென்று வழிபடுவதோடு நன்கொடையையும் வாரி இரைக்கிறார்.
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனுக்கும், மகளுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. தற்போது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெற உள்ளது.

ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி ஆனந்த் அம்பானி பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இரண்டு முக்கிய கோவில்களுக்கு சுமார் ஐந்து கோடி ரூபாயை இவர் தானமாக வழங்கியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள காமாக்கியா கோயிலுக்கு சென்ற ஆனந்த் அம்பானி அங்கே சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். வழிபாடுகளை முடித்த ஆனந்த் அம்பானி, காமாக்கியா கோயிலுக்கு 2.51 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
ரிலையன்ஸ் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராகவும் செயல்பட்டு வரக்கூடிய ஆனந்த் அம்பானி, ஜெகன்நாத் கோயிலுக்கும் 2.51 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். பூரி ஜெகன்நாதர் கோயிலுக்கு சென்றிருந்த ஆனந்த் அம்பானி அங்கே ஜெகன்நாதரை வழிபட்டார்.
கோயில் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு தரப்பட்டது. வழிபாடு நடத்தி முடித்த ஆனந்த் அம்பானி கோயிலுக்கு மூன்று வெள்ளி கதவுகளை வழங்க இருப்பதாக கூறினார். தொடர்ந்து 2.51 கோடியை நன்கொடையாக வழங்கினார்.
முகேஷ் அம்பானியின் குடும்பம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் புதிதாக 14 கோயில்களை கட்டுவதற்கான நிதி உதவிகளை அளித்துள்ளது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் வரும் ஜூலை மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
இவர்களது நிச்சயதார்த்த நிகழ்வு அதாவது பாரம்பரிய ரோகா நிகழ்வு ராஜஸ்தானின் ராஜ்சாமந்தியில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் நடைபெற்றது. இதனை அடுத்து நடப்பாண்டு மார்ச் மாதத்தில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஹாலிவுட் நடிகர்கள், பணக்காரர்கள், பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் உரிமையாளர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் என மூன்று நாட்கள் நிகழ்ச்சி களை கட்டியது. வரும் ஜூலையில் திருமணம் நடத்துவதற்கான பணிகளை குடும்பத்தினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications