மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு நாளை (ஜூலை 12) பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்காக அம்பானி குடும்பத்தினர் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். திருமணத்திற்கான சடங்குகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆனந்த் அம்பானி மும்பையில் பொதுமக்களுக்காக 40 நாட்கள் திருமண விருந்தினை வழங்குவது தெரிய வந்துள்ளது.
ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்ட்க்கும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. நாளை (ஜூலை 12ஆம் தேதி )திருமணம், ஜூலை 13ஆம் தேதி சுப ஆசீர்வாத நிகழ்ச்சி, ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன.

தனது திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆனந்த் அம்பானி சார்பில் ஏற்கனவே அம்பானி குடும்பத்தினர் 50 பேருக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் மணமக்களுக்கு தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் திருமண பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆனந்த் அம்பானி மும்பையின் தொடர்ந்து 40 நாட்களுக்கு மக்களுக்கு விருந்தளித்து வருகிறார்.
ஜூன் மாதம் 5ஆம் தேதி முதலே இந்த உணவு விருந்து வழங்கப்பட்டு வருகிறது. வரும் 15ஆம் தேதி இது முடிவடையும் என தெரிகிறது. ஒரு நாளைக்கு 9,000 பேருக்கு உணவளிக்கும் வகையில் விருந்துக்கு அவர் ஏற்பாடு செய்திருக்கிறாராம். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி இருக்கக்கூடிய வீடியோவில் மக்கள் ஆர்வமுடன் வந்து உணவருந்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஒரே சமயத்தில் 4,000 பேர் வரை அமர்ந்து உண்ணக்கூடிய வகையில் இதற்கான பந்தல்கள் மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கே வருபவர்கள் அனைவரும் ஆனந்த் அம்பானிக்கு திருமண வாழ்த்தையும் தங்களது ஆசீர்வாதத்தையும் தெரிவிக்கிறார்கள். இந்த திருமண விருந்தில் பல்வேறு உணவுகள் பரிமாறப்படுகின்றன.
அம்பானி குடும்பத்தினர் ஜூன் 29ஆம் தேதி முதல் குஜராத்தி முறைப்படியான திருமண சடங்குகளை செய்து வருகின்றனர். தாய்மாமன் சீர் வழங்குவது, சங்கீத் மற்றும் மெஹந்தி என பல்வேறு நிகழ்ச்சிகளும் கலைகட்டின. முன்னதாக அம்பானி குடும்பத்தினர் திருமணத்துக்கு முந்தைய இரண்டு நிகழ்வுகளை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தனர்.
ஒன்று குஜராத்தில் மார்ச் மாதம் நடைபெற்றது , இரண்டாவது ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications