கிட்டத்தட்ட ஓராண்டாக நடைபெற்று வந்த ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண முன்வைபோக நிகழ்ச்சிகள் அனைத்தும் வெகு விமரிசையாக முடிந்தன.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் தோழியான ராதிகா மெர்ச்சன்ட்டை ஜூலை 12 ஆம் தேதியன்று மணமுடிக்கிறார்.

திருமணத்துக்காக உலகளவில் இருந்து முக்கிய விருந்தினர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இதற்காக ஏராளமான உணவுகள் தேர்வு செய்யப்பட்டு மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது. அம்பானி இல்லத் திருமண சாப்பாட்டை மறக்க முடியாத விருந்தாக ஆக்குவதற்காக ஏகப்பட்ட ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு வருகின்றன. மும்பையின் பாந்த்ரா- குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெறுகிறது.
திருமணத்துக்காக வாராணசியின் பிரபல காஷி சாட் பண்டார் நிறுவனத்தில் இருந்து விருந்தினர்களுக்காக ஃபாஸ்ட் புட் ஐட்டங்கள் தயாரித்து பரிமாறப்படுகிறது.
இதில் டிக்கி, தக்காளி சாட், பாலக் சாட், சன்னா கச்சோரி, குல்ஃபி அடங்கும்.
காஷி சாட் பண்டார் நிறுவனத்தின் அனைத்து சிறப்பு உணவுகளும் விருந்தினர்களுக்கு அளிக்கப்படும். இதற்காக கடந்த மாதம் வாராணசிக்கு சென்ற நீதா அம்பானி அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டுவிட்டு காஷி சாட் பண்டாருக்குச் சென்றார். அங்குள்ள அனைத்து பிரபல உணவுகளையும் அவர் சாம்பிள் பார்த்தார்.
அந்த ஐட்டங்களை சுவைத்த பின்னர் நிறுவனத்தின் உரிமையாளர் ராகேஷ் கேசரியிடம் தனது மகன் திருமணத்துக்கு வேண்டிய உணவு ஐட்டங்களை ஆர்டர் செய்தார் நீதா அம்பானி.
இதுபற்றி ராகேஷ் கேசரி கூறுகையில், எங்களது சாட் பண்டாருக்கு நீதா அம்பானி ஜூன் 24 ஆம் தேதியன்று வந்திருந்தார். அவர் டிக்கி சாட், டோமேட்டோ சாட், பாலக் சாட், குல்ஃபி ஃபலூடா ஆகியவற்றை சுவைத்துப் பார்த்தார். அவை நீதா அம்பானிக்கு மிகவும் பிடித்துவிட்டதால் ஆர்டர் செய்துள்ளார் என்றார்.
மும்பை ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் ஜூலை 13 ஆம் தேதியன்று சுப ஆசிர்வாதம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கடுத்த நாள் ஜூலை 14 ஆம் தேதியன்று திருமண வரவேற்பு எனும் மங்கள உற்சவம் நடைபெறுகிறது. இத்துடன் திருமண நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications