முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை முன்னிட்டு மும்பையின் பாந்த்ரா, குர்லா பகுதிகளில் உள்ள அனைத்து 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் எல்லா ரூம்களும் புக் செய்யப்பட்டு விட்டன.
அதுமட்டுமல்லாமல் அனைத்து ரூம்களின் கட்டணமும் கன்னாபின்னாவென்று அதிகரித்துவிட்டது.
மும்பையின் முக்கிய ரியல் எஸ்டேட் கேந்திரமான பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள இரண்டு பெரிய ஹோட்டல்களிலும் அறைகள் நிரம்பிவிட்டன. இந்த காம்ப்ளக்ஸில்தான் அம்பானி குடும்பத் திருமணம் நடைபெற இருக்கிறது.

பாந்த்ரா- குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜூலை 14 ஆம் தேதியன்று ஒரு அறை வாடகை ரூ.91,650 என வெப்சைட்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறையின் வழக்கமான கட்டணம் வெறும் ரூ.13,000 தான். ஆனால் திருமணத்தின் காரணமாக இந்தளவுக்கு கட்டணம் எகிறிவிட்டது.
மும்பை பாந்த்ரா- குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் அம்பானியின் வாரிசுக்கு ஜூலை 12ஆம் தேதியன்று திருமணம் நடைபெறுகிறது. திருமணத்துக்கு வரும் விருந்தினர்களை எங்கு தங்க வைக்க இருக்கின்றனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் மும்பையில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் எல்லா ரூம்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.
ஜூலை 5 ஆம் தேதியன்று இன்டர்நேஷனல் பாப் இசை பிரபல கலைஞர் ஜஸ்டின் பீபரின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
திருமணம் 12 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மற்ற சடங்குகள் ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஜூலை 13 ஆம் தேதியன்று சுப ஆசிர்வாதம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் தெய்வ ஆசிர்வாதம் கிடைக்கும். மறுநாள் ஜூலை 14 ஆம் தேதியன்று இறுதி நிகழ்ச்சியாக மங்கள உற்சவம் எனும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமணத்தை முன்னிட்டு மும்பையில் போக்குவரத்துப் போலீஸார் பல்வேறு மாறுதல்களை செய்துள்ளனர். பாந்த்ரா, குர்லா பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இந்த மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜூலை 12 முதல் 15 ஆம் தேதிவரை ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டருக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் மதியம் 1 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை குறிப்பிட்ட அளவுக்குத்தான் அனுமதி வழங்கப்படும் என போக்குவரத்துப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications