இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண பத்திரிக்கை தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியினரின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது.
தொழிலதிபர் வீரன் மெர்சென்டின் மகளான ராதிகா மெர்சென்டை ஆனந்த் திருமணம் செய்ய இருக்கிறார். திருமண நாள் நெருங்கிவிட்ட நிலையில் அம்பானி குடும்பத்தினர் முக்கிய பிரமுகர்களுக்கு பத்திரிகைகளை அனுப்பி வைத்த வண்ணம் உள்ளனர்.

கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையாவிற்கு முகேஷ் அம்பானி மற்றும் நீதா ஆகியோர் திருமண பத்திரிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். இதனை சித்தராமையாவின் மகள் ஸ்மிதா ராகேஷ் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிறிய சாமி அறையை போன்ற வடிவத்தில் இந்த திருமண அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவை திறந்த உடன் வெள்ளியில் சிறிய கோயில் போன்ற அமைப்பு உள்ளது.

நான்கு பக்கமும் அதனை சுழற்றலாம். ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு கடவுள் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து வெள்ளியில் இருப்பது மற்றொரு சிறப்பு. பின்னர் பாக்ஸ் போல இருக்கிறது அதனை திறந்தால் கணபதி, கிருஷ்ண ராதை மற்றும் துர்கையின் படம் இடம்பெற்றுள்ளன. பின்னர் திருமண அழைப்பிதழ் வருகிறது.
ஒட்டுமொத்தமாக இவை அனைத்தும் ஒரு சில்வர் நிறப்பெட்டியில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மிகவும் ஆடம்பரமான இந்த பத்திரிகை சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கானவர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. ஒரு பயனர், இந்த ஒரு பத்திரிக்கைக்கு அம்பானி செய்துள்ள செலவு தான் நான் என் மொத்த திருமணத்துக்கும் செய்த செலவு என கூறியுள்ளார்.

மற்றொரு நபரோ இந்த கல்யாண பத்திரிக்கையை நாம் பெற்று இதனை பிரித்து படித்துப் பார்ப்பதற்குள், மதிய உணவையே முடித்து விடுவேன் என கூறியுள்ளார். சிலர் இது மிகவும் தனித்துவமானது, அழகாக இருக்கிறது என பாசிட்டாவான கருத்துகளை தெரிவிக்கின்றனர். ஒரு பயனாளர் இந்த அழைப்பிதழுக்கு அவர்கள் செய்துள்ள செலவு தான் என்னுடைய மொத்த வாழ்நாளுக்கான செலவு என தெரிவித்துள்ளார்.
அம்பானி குடும்பத்தினர் திரை உலக பிரபலங்கள் மற்றும் பிற துறை சார்ந்த பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழை அனுப்பி வருகின்றனர். ஆனந்த் மற்றும் ராதிகாவிற்கு ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருமணம் நடைபெற இருக்கிறது. 13ஆம் தேதி சுப ஆசிர்வாத நிகழ்வும், 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

Story written by: Devika


Click it and Unblock the Notifications