டெல்லி: ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இரண்டு பெரிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்ற வருகிறது. பாஜகவின் கூட்டணியில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரை சேர்ந்த நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

இதனை அடுத்து மத்திய அரசு இந்த இரண்டு மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது இரு மாநிலங்களிலும் புதிய ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 6,798 கோடி ரூபாய் ஆகும்.
பீகாரில் 256 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் பாதை திட்டங்களும் ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதியில் புதிய ரயில் பாதைகளை அமைக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிகிறது. ஆனால் இந்த ரயில் திட்டங்களுக்கு அரசியல் நோக்கங்கள் எதுவும் கிடையாது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் 2245 கோடி மதிப்பீட்டில் ரயில் திட்ட பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் மூலம் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா இடையிலான இணைப்பு மேம்படுத்தப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் கூறுகிறது.
அமரலிங்கேஸ்வர சுவாமி கோயில், அமராவதி ஸ்தூபா, தையானா புத்த சிலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் மச்சிலிபட்டினம் துறைமுகம், கிருஷ்ணபட்டினம் துறைமுகம் மற்றும் காக்கிநாடா துறைமுகத்திற்கும் இடையிலான இணைப்பு வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாதையில் மூன்று கிலோமீட்டர் நீளப் பாதை கிருஷ்ணா நதியின் மீது அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ரயில் பாதை திட்டங்களின் மூலம் ஆறு கோடி கிலோ அளவிலான கார்பன் டை ஆக்சைடு வெளியீடு குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இது 25 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு சமம் எனக் கூறப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தை பொருத்தவரை அங்கே இருக்கும் ரயில் பாதைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. இந்த 256 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் பாதைகளை மேம்படுத்துவதன் மூலம் உத்தரப்பிரதேசம் மற்றும் வடக்கு பீகார் இடையிலான போக்குவரத்து அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது .அது மட்டும் இன்றி நேபாளத்துடனான சர்வதேச எல்லையில் இந்த ரயில் பாதை அமைந்திருக்கிறது.
இந்த ரயில் திட்டத்தின் வாயிலாக 162 கோடி கிலோ கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு தடுக்கப்படும் என்றும் இது 6.5 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு சமம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திட்டங்கள் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications