பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஒரு ஊழியர் உடன் வேலை செய்யும் பெண்களை தவறாக வீடியோ எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை பணிநீக்கம் செய்துள்ள இன்போசிஸ் நிறுவனம் இது போன்ற செயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இன்போசிஸ் இருக்கிறது. லட்சக்கணக்கான ஊழியர்கள் இங்கே வேலை செய்கின்றனர். சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய முன்னணி நகரங்களில் எல்லாம் இன்போசிஸ் நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி இன்போசிஸ் அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் அத்துமீறி பெண்களை தவறாக வீடியோ எடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு இன்போசிஸ் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் ஊழியர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறையில் ஃபிளாஷ் லைட் அடிப்பதை பார்த்துள்ளார். அருகில் இருந்த கழிவறையில் இருந்து ஒரு நபர் போனில் தன்னை வீடியோ எடுப்பதை உணர்ந்த அந்த பெண் உடனே கூச்சலிட்டுள்ளார். அவருடைய சத்தம் கேட்டு சக ஊழியர்கள் வந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 28 வயதான ஸ்வப்னில் நாகேஷ் மாலி என்பதும் பெங்களூரு இன்போசிஸ் அலுவலகத்தில் 3 மாதங்களுக்கு முன்னர் வேலைக்கு சேர்ந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருடைய செல்போனில் நிறுவனத்தில் பணி புரியும் சுமார் 30க்கும் அதிகமான பெண்களை தவறான முறையில் வீடியோ எடுத்து வைத்துள்ளார் என்பது அப்போது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக நிறுவன ஹெச்ஆர் மற்றும் பெங்களூரு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இன்போசிஸ் நிறுவனம் அந்த இளைஞரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. காவல்துறையிடமும் புகார் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது. நிறுவனம் இது போன்ற செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றும் இன்போசிஸ் நிறுவன அலுவலகங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் நடத்தை விதிகளை மீறினால் கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என இன்போசிஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்ல கூடிய அலுவலகத்தில் ஆண் ஊழியர் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications