குடிவாடா: ஆந்திர பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு மீண்டும் அண்ணா உணவகங்களை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சந்திரபாபு நாயுடு தன்னுடைய தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குடிவாடா பகுதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்ணா உணவகத்தை திறந்து வைத்தார். அவரது மனைவியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழகத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களை போலவே ஆந்திராவின் அண்ணா உணவகங்களில் 5 ரூபாய்க்கே உணவு வழங்கப்படுகிறது.

தற்போது ஆந்திராவில் 203 இடங்களில் அண்ணா உணவகங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. ஒரு நாளைக்கு அண்ணா உணவகங்களை நடத்த 53 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, பலரும் தானாக முன்வந்து இந்த திட்டத்திற்கு நன்கொடைகளை வழங்குவதாக சுட்டிக்காட்டினார். நிரந்தரமாக அண்ணா உணவகங்களை செயல்படுத்த தேவையான திட்டத்தை தனது அரசு கொண்டு வர இருப்பதாக சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார்.
அண்ணா உணவகங்களை நடத்துவதற்காக ஆண்டுக்கு அரசு 200 கோடி ரூபாயை ஒதுக்கும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் இந்த வங்கி கணக்கிற்கு account No. 37818165097, ISFC: SBIN0020541, SBI Chandramouli Nagar branch நிதி அனுப்பலாம் என தெரிவித்துள்ளார். ஏழை மக்கள் பசியுடன் இருக்க கூடாது என்பதை நோக்கமாக கொண்டு தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் இந்த திட்டம் தனிப்பட்ட முறையில் தனக்கு தன்னிறைவை தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2014ஆம் ஆண்டிலேயே சந்திரபாபு நாயுடு அரசு அண்ணா உணவகங்களை செயல்படுத்தியது. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி அரசு அண்ணா உணவகங்களை மூடியது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களுக்குள் மீண்டும் அண்ணா உணவகங்கள் தொடங்கப்படும் என சந்திரபாபு நாயுடு தேர்தல் பரப்புரையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, குடிவாடாவில் அண்ணா உணவகத்தை திறந்து வைத்த சந்திரபாபு நாயுடு ஏழைகளுக்கு உணவு பரிமாறினார். பின்னர் சந்திரபாபு நாயுடுவும் அவர்களுடன் உணவருந்தினார். அப்போது, தன்னுடன் உணவருந்திய ஏழைமக்களிடம் அவர்களின் பிரச்சினைகளை சந்திரபாபு நாயுடு கேட்டறிந்து, அவர்களுக்கு உடனடியாக உதவும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
அண்ணா உணவகங்களில் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு ஆகியவை, ஒவ்வொரு வேளையும் 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது . இதன் படி 15 ரூபாய் இருந்தாலே போதும் ஒரு நபர் மூன்று வேளையும் வயிறு நிறைய உணவருந்த முடியும். ஒரு நாளைக்கு சுமார் 300 பேருக்கு உணவளிக்கும் வகையில் அண்ணா உணவகங்கள் செயல்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications