முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சி அமைத்து ஒரு மாத காலம் முடிந்துள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் விமான போக்குவரத்து துறை சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளில் சந்திரபாபு நாயுடு மிக தீவிரமாக இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக கூடிய விரைவில் ஆந்திர மாநிலத்தில் புதிதாக நான்கு முதல் ஐந்து விமான நிலையங்களை கட்டுவதற்காக முடிவெடுத்துள்ளார்.
குறிப்பாக குப்பம், தகாதார்தி, நாகார்ஜுனா சாகர், மூல பேட்டா ஆகிய இடங்களில் விமான நிலையங்களை அமைத்து இந்த பகுதிகளை முன்னேற்றுவது என சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

இந்த பகுதிகளில் விமான நிலையங்களை கட்டமைப்பதற்காக இந்திய விமான போக்குவரத்து ஆணையம் 800 முதல் 1000 ஏக்கர் வரையிலான நிலங்களை கோரி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏ 320 ரக விமானங்களை இயக்கும் வகையில் இந்த விமான நிலையங்கள் கட்டப்படும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் மேம்பாட்டு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
பாஜக ஆந்திர மாநில தலைவரும் எம்பியுமான டகுபதி புரந்தேஸ்வரி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு அமைந்திருக்கிறது, இதன் மூலம் ஆந்திராவிற்கு புதிதாக மூன்று விமான நிலையங்கள் வர இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.
குப்பம், தகாதார்தி மற்றும் மூல பேட்டா ஆகிய இடங்களில் விமான நிலையம் வர இருப்பதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் ஆந்திராவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் தொகுதி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி ஆகும். சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் ஆட்சி அமைத்துள்ளது மட்டுமில்லாமல் தற்போது மத்தியிலும் அவரது தயவில்தான் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்துள்ளது. எனவே அவருக்கான முக்கியத்துவம் என்பது அதிகரித்துள்ளது.
மத்தியில் பாஜகவின் ஆட்சி இருப்பதை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக தான் புதிதாக நான்கிலிருந்து ஐந்து விமான நிலையங்களை கட்டும் திட்டத்தில் இறங்கியுள்ளார்.
ஏற்கனவே போகாபுரம் பகுதியில் சர்வதேச விமான நிலையம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது . தற்போது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம்மோகன் நாயுடு விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் நிலையில் மாநிலத்தில் விமான நிலைய பணிகளை தீவிர படுத்தியுள்ளார். கடந்த வாரம் போகாபுரம் விமான நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இங்கே பணிகள் நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications