ஸ்ரீ சிட்டி: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஸ்ரீ சிட்டி பகுதியில் ஓரே நாளில் 15 புதிய தொழிற்சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார். சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே மாநிலத்தில் தொழில்துறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஸ்ரீ சிட்டி பகுதியில் திங்கட்கிழமை அன்று அவர் 15 புதிய தொழிற்சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதோடு ஏழு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மதிப்பு 900 கோடி ரூபாய் ஆகும். இந்த புதிய தொழில்கள் மூலம் 2,740 வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. அதே போல ஐந்து நிறுவனங்களுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் ஸ்ரீ சிட்டி பகுதியில் 1,213 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் வர உள்ளன. இந்த புதிய முதலீடுகள் வாயிலாக 4060 வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின் முன்னணி தொழில் நகரமாக ஸ்ரீ சிட்டி உருவான இருப்பதாகவும் பல்வேறு நிறுவனங்களும் இங்கே தாராளமாக வந்து முதலீடு செய்யலாம் என்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் அரசு செய்து தரும் என்றும் கூறினார். தற்போது ஸ்ரீ சிட்டி பகுதியில் 30 நாடுகளை சேர்ந்த 200 நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர் சர்வதேச போட்டி நகரமாக ஸ்ரீ சிட்டி உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சூரியசக்தி மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் தனது அரசு கவனம் செலுத்துவதாக குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு தொழில் நிறுவனங்கள் நீடித்த நிலை தன்மை கொண்ட உற்பத்தி நடைமுறைகளுக்கு மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக பல்வேறு நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய சந்திரபாபு நாயுடு தன்னுடைய அரசு தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கைகளை செயல்படுத்தும் என வாக்குறுதி அளித்தார். இதன் மூலம் அவர்கள் எளிமையாக ஆந்திராவில் வந்து தொழில் புரியலாம் என்றும் இது மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு வேலை வாய்ப்பையும் அதிகரிக்க உதவும் என தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு முதலே ஆந்திரா Ease of Doing Business பிரிவில் முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, Speed of Doing Business பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை தான் தனது அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக தொழில்துறையினரை சந்தித்த போது அவர்கள் தரப்பில் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டதாகவும் விரைவில் அவை அனைத்தும் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.நிலுவையில் உள்ள நிதியுதவிகள், உள்கட்டமைப்பு வசதி, சாதகமற்ற கொள்கைகள் என அனைத்தும் மாற்றப்படும் என்றார். வரி நடைமுறைகளும் மாற்றப்படும் என உறுதி அளித்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications