புகழ்பெற்ற ஆந்திரா நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்க ல்யாண் ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த பதவிக்காக அவருக்கு சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், எனக்கு சம்பளம் வேண்டாம் என அவர் மறுத்திருக்கிறார். இதுதான் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருப்பவர் பவன் கல்யாண். இவர் ஜனசேனா என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். அண்மையில் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்து ஜனசேனா கட்சியும் களம் கண்டது. பவன் கல்யாணும் தேர்தலில் போட்டியிட்டார். பவன் கல்யாண் வெற்றி பெற்றதோடு அவரது ஜனசேனா கட்சியும் 21 இடங்களை பிடித்தது.
இந்த வெற்றியை அடுத்து சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பொறுப்பேற்றார். பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவர் பதவியேற்று 1 மாதம் ஆகும் நிலையில் துணை முதலமைச்சர் பதவிக்கான ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் அதனை ஏற்க மறுத்துள்ளார்.
ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பேசிய பவன் கல்யாண், சமீபத்தில் தான் தலைமை செயலகத்திற்கு சென்ற போது மூன்று நாட்கள் தலைமை செயலகத்திற்கு வந்ததற்காக 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவது தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கொண்டு வந்ததாகவும், தன்னை கையெழுத்திடுமாறு கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது நான் சம்பளம் வேண்டாம் என கூறிவிட்டேன், சம்பளம் மட்டுமல்ல வேறு எந்த சிறப்பு கொடுப்பனவுகளும் எனக்கு வேண்டாம் என நான் அப்போது மறுப்பு தெரிவித்து விட்டேன் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார் .
தான் அமைச்சராக இருக்கக்கூடிய பஞ்சாயத்து ராஜ் துறையில் போதிய நிதி இல்லாமல் இருப்பதால் நான் சம்பளம் வாங்கப் போவதில்லை என்னுடைய துறையை மேம்படுத்த அதை பயன்படுத்துவேன் என கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய அலுவலகங்களை புதுப்பிப்பதற்காகவும் அங்க இருக்கக்கூடிய மரச்சாமான்களை மாற்றுவதற்காகவும் அதிகாரிகள் தன்னிடம் கையெழுத்து கோரியதாகவும் தான் அதையெல்லாம் வேண்டாம் என மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அலுவலகத்தை புதுப்பிப்பதற்கான எந்த ஒரு செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் அரசு பணத்தில் இருந்து செலவிட வேண்டாம் என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். பவன் கல்யாண் திரைப்படங்களில் நடிக்க பல கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார். மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் 115 கோடி ரூபாய் ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications