துபாய்: நம் எதிர்கால வாழ்க்கை வளமாக இருக்க சேமிப்பு பழக்கம் மிகவும் அவசியம். அது உண்மை தான் என்பதை நிரூபிக்கும் ஒரு நிகழ்வு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு எலக்ட்ரீசியன் தன்னுடைய சேமிப்பு பழக்கத்தின் மூலம் தற்போது கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் 46 வயதான நாகேந்திரம் பொறுகெட்டா. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். அங்கே இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நிதி நிறுவனம் ஒன்றில் நேஷனல் பாண்ட்ஸ் மூலம் மாதந்தோறும் 100 திராம்களை சேமித்து வந்துள்ளார். தற்போது அது தான் இவருக்கு ஜாக்பாட்டை பெற்று தந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்காக சம்பாதிக்க வேண்டி பொறுகெட்டா தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்தார். அப்போது நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு 2019 ஆம் ஆண்டில் நேஷனல் பாண்ட்ஸ் திட்டத்தில் சேமிக்க தொடங்கினார்.
நேஷனல் பாண்ட்ஸ் கார்ப்பரேஷன் என்பது 2016ஆம் ஆண்டு நிறுவப்பட்ட துபாயை சேர்ந்த ஒரு சேமிப்பு மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகும். இந்த நிதி நிறுவனமானது துபாய் வாழ் மக்கள், துபாய் நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு ஒரு சேமிப்பு திட்டத்தை வழங்குகிறது. இதற்கு பெயர் நேஷனல் பாண்ட்ஸ்.
இந்த திட்டத்தில் மக்கள் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை சேமிக்க வேண்டும். அவ்வாறு தவறாமல் பணம் சேமிப்பவர்களுக்கு இந்த நிறுவனம் பல்வேறு பரிசுகளை வழங்குகிறது. 35 மில்லியன் திராம் அளவுக்கான பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடம்பர கார்கள் என பல்வேறு பரிசுகளை வழங்குகிறது.
அந்த வகையில் நேஷனல் பாண்ட்ஸ் மூலம் தற்போது பொறுகெட்டா பரிசினை பெற்றுள்ளார். ஒரு மில்லியன் திராம் அதாவது 2.2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அவருக்கு கிடைத்துள்ளது. சேமிப்பு அனைவரும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு பழக்கம் என கூறும் நாகேந்திரம் பொறுகெட்டா, சேமிப்பை மாதம்தோறும் கைவிடாமல் நாம் தொடரும்போது பின்னாளில் நமக்கு மிகப்பெரிய பரிசை கொண்டு வந்து சேர்க்கும் அதற்கு நானே பெரிய உதாரணம் என கூறுகிறார்.
"ஒரு நல்ல வாழ்க்கை வாழ , குழந்தைகளுக்கு ஒரு சிறந்த கல்வியை பெற்று தர, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் துபாய்க்கு குடி பெயர்ந்தேன். நேஷனல் பாண்ட்ஸ் மூலமாக என்னுடைய கனவு தற்போது நிறைவேறியுள்ளது. இதை வைத்து நான் என்னுடைய குழந்தைகளுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை அமைத்து தருவேன்" என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications