விசாகப்பட்டினம், ஆந்திரா: ஆந்திர பிரதேச மாநில அரசு ஐடி துறை சார்ந்த முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் அலுவலகத்தை விசாகப்பட்டினத்தில் அமைப்பதற்கு 99 பைசாவிற்கு 21 ஏக்கர் நிலத்தை ஆந்திர பிரதேச மாநில அரசு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆந்திர பிரதேச மாநில அரசு விசாகப்பட்டினத்தில் 21.16 ஏக்கர் நிலத்தை டிசிஎஸ் நிறுவனத்திற்கு 99 பைசாவிற்கு வழங்க இருக்கிறது. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக மணி கண்ட்ரோல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. விசாகப்பட்டினத்தை முக்கியமான தொழில்நுட்ப மையமாக மாற்ற வேண்டும் என திட்டமிட்டு அது தொடர்பான முதலீடுகளை ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு.

இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான நர லோகேஷ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பைக்கு சென்று டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமையகத்தில் நிறுவன தலைவர்களை சந்தித்து விசாகப்பட்டினத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் அலுவலகத்தை அமைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய அடுத்த கட்ட விரிவாக்கத்திற்கு ஆந்திராவை மையமாக கொள்ள வேண்டும் என்றும் டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய அலுவலகங்களை திறப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ஆந்திர மாநில அரசு தயாராக இருக்கிறது என்றும் அப்போது வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆந்திர மாநில அரசு டிசிஎஸ் நிறுவன தலைமை அதிகாரிகளோடு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதியாக கூடிய விரைவில் விசாகப்பட்டினத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் அலுவலகம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த அலுவலகத்திற்கு ஆந்திர மாநில அரசு 21.16 ஏக்கர் பரப்பளவு நிலத்தை டிசிஎஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க இருக்கிறது. இதற்காக டிசிஎஸ் நிறுவனம் வெறும் 99 பைசாவை மட்டுமே செலுத்தினால் போதும்.
ஆந்திர மாநில அரசு மிகப் பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு அனைத்து விதமான சலுகைகளையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற தகவலை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர் .
முன்னதாக பிரதமர் மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது டாடா மோட்டார்ஸுக்கு தேவையான இடத்தை 99 பைசாவிற்கு வழங்கினார். அதே மாடலை பின்பற்றி தற்போது ஆந்திர மாநில அரசும் டாடா நிறுவனத்திற்கு இடத்தை வழங்க முன் வந்திருக்கிறது. அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களுடைய அலுவலகத்தை கொண்டிருக்கும் ஒரு நகரமாக விசாகப்பட்டினத்தை மாற்ற வேண்டும் என ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு முடிவு செய்து இருக்கிறத. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications