சான் பிரான்சிஸ்கோ: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர மாநில அமைச்சர் நர லோகேஷ் மைக்ரோசாப்ட் , அடோப், ஆப்பிள் நிறுவனங்களை தங்களுடைய மாநிலத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு முதலீடுகளையும் தங்களுடைய மாநிலத்தை நோக்கி ஈர்க்க வேண்டும் என்பதில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவளத்துறை அமைச்சரான நர லோகேஷ் அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ளார்.

தன்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட டெக் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து அவர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யநாதெல்லா, அடோப் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயன், ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாட்டு பிரிவு துணைத் தலைவர் பிரியா பாலசுப்பிரமணியம் ஆகியோரை சந்தித்த அவர் உற்பத்தி ,வேளாண் தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமை ,செயற்கை நுண்ணறிவு ஆகிய பிரிவுகளில் ஆந்திராவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யநாதெல்லாவை சந்தித்த அவர் ஆந்திர மாநிலத்தில் மின் ஆளுமையை மேம்படுத்தவும் ஐடி மையங்களை அமைக்கவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவி தேவை என கேட்டுக் கொண்டாராம்.
சத்யநாதெல்லாவின் தந்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரி அவர் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பொறுப்பினை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆந்திர மாநிலத்தை ஐடி தலைநகரமாக மாற்ற வேண்டுமென தங்களுடைய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும் பல்வேறு புதிய ஐடி பூங்காக்களும் புத்தாக்க மையங்களும் நிறுவப்பட்டு வருவதாகவும் அப்போது நர லோகேஷ் விவரித்தார்.
கிளவுட் கட்டமைப்பு மற்றும் டேட்டா மையங்களின் நகரமாக ஆந்திர பிரதேச மாநிலம் உருவாக்ப் போகிறது என சுட்டிக்காட்டிய அவர் இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் தங்களுடைய அரசு உருவாக்கித் தரும் என உறுதியளித்தாராம்.
ஆந்திர மாநில தலைநகரான அமராவதியில் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் நிறுவுவதில் தங்களுடைய அரசு உறுதியுடன் இருக்கிறது என அப்போது நர லோகேஷ் கூறினாராம். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் என சத்யநாதெல்லா உறுதி அளித்துள்ளார்.
பின்னர் அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாந்தனுவை சந்தித்து தங்களுடைய மாநிலத்தில் அடோப் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தை திறக்க வேண்டும் எனவும் ஸ்மார்ட் கவர்ன்ஸில் பங்கேற்க வேண்டும் எனவும் நர லோகேஷ் கேட்டுக் கொண்டாராம்.
இது தொடர்பாக நிறுவன கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்பதாக லோகேஷிடம் சாந்தனு உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாட்டு பிரிவு துணைத் தலைவர் பிரியா பாலசுப்ரமணியமை சந்தித்த நர லோகேஷ் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை ஆந்திராவில் நிறுவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக இவர் டெஸ்லா நிறுவன தலைமையகத்துக்கு சென்று ஆந்திராவில் முதலீடு செய்யும் படி கேட்டுக் கொண்டார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications