ஆஸ்டின், அமெரிக்கா: ஆந்திர மாநில அமைச்சரும் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய நபருமான நர லோகேஷ் அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்திற்கு சென்று ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆந்திர மனிதவள மேம்பாடு, ஐடி, மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக நர லோகேஷ் செயல்பட்டு வருகிறார். இவர் அமெரிக்காவின் ஆஸ்டின் பகுதியில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்றார்.

டெஸ்லா என்பது எலான் மஸ்குக்கு சொந்தமான மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகும். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் வைபவ் தனேஜாவை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.
குறிப்பாக ஆந்திர பிரதேச மாநிலத்தில் சர்வதேச அளவிலான மின்சார வாகன உற்பத்திக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் டெஸ்லா நிறுவனம் இங்கே முதலீடு செய்ய வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதி மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிப்பதற்கு உகந்த இடம் என அப்போது அவர் குறிப்பிட்டார்.
மின்சார வாகன உற்பத்தி மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் ஆகிய பிரிவுகளில் உலகிலேயே முன்னணி நிறுவனமாக டெஸ்லா இருப்பதை சுட்டிக்காட்டிய வைபவ் தனேஜா பல்வேறு புதுமைகளை டெஸ்லா நிறுவனம் கூடிய விரைவில் கொண்டு வர இருப்பதாக அப்போது தெரிவித்தார். கடந்த ஆண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனம் 18.8% வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டாராம்.
ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு 2029 ஆம் ஆண்டுக்குள் 72 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி என்ற இலக்கினை நிர்ணயம் செய்துள்ளதாகவும், இந்த இலக்கினை நிறைவேற்றுவதற்கு டெஸ்லா போன்ற சர்வதேச நிறுவனங்கள் உதவியாக இருக்கும் என்றும் நர லோகேஷ் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் தற்போது கியா மற்றும் ஹீரோ மோட்டார்ஸ் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதை குறிப்பிட்ட நர லோகேஷ் தங்களுடைய அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்கள் பிரிவில் தற்போது கவனம் செலுத்தி இருப்பதாக கூறினார்.
தங்களுடைய மாநிலத்தில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான கொள்கைகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். டேட்டா மையங்கள் மற்றும் ஐடி மையங்களுக்கு தேவையான புதுமையான பேட்டரி பவர் ஸ்டோரேஜ் சொல்யூஷன்களை வழங்குவதில் டெஸ்லா நிறுவனம் முக்கிய பங்காற்றும் என்றும் அதற்கு தங்களுடைய அரசு உதவியாக இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
அது மட்டும் இன்றி தங்களுடைய மாநிலத்தில் தொழில் பூங்காக்களை அமைக்க வேண்டும் என்றும் அப்போது அவர் அழைப்பு விடுத்தாராம்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதலே தொழில்களையும், முதலீடுகளையும் ஈர்க்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications