இந்தியாவில் மின்சார வாகனச் சந்தை படிப்படியாக வளர்ந்து வருகிறது. இந்தச் சந்தையில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக பல இந்திய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் டெஸ்லா நிறுவனமும் இந்தியாவிற்கு வரவுள்ளது. சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்தால், தங்கள் ஆலையை எங்கு நிறுவும் என்ற எதிர்பார்ப்பு நிலவும். அதற்காக பல மாநிலங்களும் சலுகைகளை அறிவிக்கும்.
அந்த வகையில் ஆந்திரப் பிரதேச அரசு டெஸ்லா நிறுவனத்தை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரத்தியேக சலுகைகளையும் அறிவித்திருக்கிறது. சில அதிகாரப்பூர்வ வட்டாரங்களின் தகவல் படி ஆந்திர பிரதேச அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB), டெஸ்லா நிறுவனத்தை கொண்டு வர, அம்மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள் மற்றும் ஏராளமான நிலம் கையிருப்பில் இருப்பதையும் முன் வைத்துள்ளது.

இதற்காக 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு தேசம் கட்சியினர் டெஸ்லா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமைச்சர் நாரா லோகேஷ், தனது அமெரிக்க பயணத்தின் போது டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான வைபவ் தனேஜாவை சந்தித்தார்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயனத்தின்போது எலான் மஸ்க்கை சந்தித்தார். தற்போது டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது பணியமர்த்தல் செயல் முறையை தொடங்கியுள்ளதால், ஆந்திரப் பிரதேச அரசு டெஸ்லாவை அம்மாநிலத்திற்கு கொண்டுவர மீண்டும் தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆந்திர பிரதேசத்தில் ஏராளமான துறைமுகங்கள் உள்ளன. ஆரம்பத்தில் டெஸ்லா நிறுவனம் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய விரும்பினால், இந்த துறைமுகங்கள் உதவிகரமானதாக இருக்கும். அதன் பிறகு ஆலைகளை அமைத்தாலும் கார்களை ஏற்றுமதி செய்வதற்கும் இந்த துறைமுகங்கள் பயன்படும் என்று கூறியுள்ளது.
அது மட்டுமின்றி ஒரு உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு தேவைப்படும் போதுமான நிலம் கையிருப்பில் உள்ளதாகவும், ஆந்திர பிரதேச அரசு தெரிவித்திருக்கிறது. ஒருவேளை டெஸ்லா நிறுவனம் உற்பத்தி அலையை ஆந்திராவில் அமைக்க விரும்பினால் தேவையான நிலத்தை உடனடியாக வழங்கவும் ஆந்திரா அரசு தயாராக இருக்கிறது. அதோடு சில சலுகைகளையும் இதற்காக வழங்கியுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனையில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மின்சார வாகனங்களின் விற்பனையில், சுமார் 60 சதவீதம் கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இருப்பதாக கூறப்படுகின்றன.


Click it and Unblock the Notifications