ஆந்திரா: ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் 14,000 கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட இருக்கிறது. சர்வதேச அளவில் சிப் தயாரிப்பு மையமாக இந்தியா மாற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஜப்பானை சேர்ந்த யிட்டோஹா மைக்ரோ டெக்னாலஜி லிமிடெட் (Yitoa Micro Technology Limited ) நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனம் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தொழில் பூங்காவில் 14,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப் தயாரிப்பு ஆலையை நிறுவ இருக்கிறது.

இந்தியாவில் அமைக்கப்படும் முதல் தனியார் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை இது என ஆந்திரா அரசு தெரிவித்துள்ளது. சிலிக்கான் கார்பைடு சிப்புகள் தயாரிப்பில் இந்த நிறுவனம் கவனம் செலுத்தும் என்றும் ஆந்திரா அரசு கூறியுள்ளது.
ஆந்திர மாநில அரசு 2024-29 செமி கண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப் கொள்கை என்ற கொள்கையை கடந்த நவம்பர் மாதம் வெளியீடு செய்தது. இதன் மூலம் ஆந்திராவை மின்னணு மற்றும் செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தான் தற்போது ஜப்பான் நிறுவனத்தோடு ஆந்திரா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புதிய சிலிக்கான் கார்பெட் சிப் தயாரிப்பு ஆலையில் ஒரு மாதத்திற்கு பத்தாயிரம் வேஃபர்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இது மாதத்திற்கு ஐம்பதாயிரம் வேஃபர்கள் என உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு கருவிகளும் ஸ்மார்ட் கருவிகளாக மாறி வரக்கூடிய நிலையில் ஸ்மார்ட் சிப்புகளுக்கான தேவைகளும் அதிகரித்துள்ளது. எனவே இந்த வாய்ப்பினை கைப்பற்றிக் கொண்டு மத்திய அரசு இந்தியாவை செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டுமென இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர மாநில அமைச்சர் நர லோகேஷ் ஆந்திர அரசின் புதுமையான கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மூலம் பல்வேறு நவீன ஆலைகள் கொண்டு வரப்படுகின்றன என தெரிவித்தார்.
சர்வதேச நிறுவனங்கள் ஆந்திராவில் வந்து தொழில் தொடங்கலாம் என்றும் அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் தங்களின் அரசு ஏற்படுத்தி தரும் என்றும் கூறினார். இந்த செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை மூலம் ஆந்திராவில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications