OCCRP அமைப்பின் அறிக்கை வியாழக்கிழமை வெளியானதில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி பங்குகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு நிலையில், இன்று மற்றொரு அறிக்கை மூலம் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமான அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்திற்கும் பிரச்சனை உருவாகியுள்ளது.
கொரோனா தொற்று நோய் காலக்கட்டத்தில் போது முக்கிய சுற்றுச்சூழல் விதிமுறைகளை பலவீனப்படுத்த இந்தியாவின் வேதாந்தா ஒரு "மறைமுக" பரப்புரை பிரச்சாரத்தை நடத்தியது என்று OCCRP அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 2021 இல், வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம், புதிய சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறாமல் இந்தியாவில் இயங்கி வரும் சுரங்க நிறுவனங்களை 50% வரை தங்களுடைய உற்பத்தியை அதிகரிக்க அனுமதிப்பதன் மூலம், இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு அரசு உத்வேகம் அளிக்க முடியும் என்று கூறியுள்ளதாக OCCRP தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேபோல் வேதாந்தா குழுமத்தின் எண்ணெய் வணிகமான கெய்ர்ன் இந்தியா, அரசு நடத்திய ஏலத்தில் வென்ற எண்ணெய்த் தொகுதிகளில் மேற்கொண்டு தோண்டுவதற்காக தேவைப்படும் பொது விசாரணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி இதில் வெற்றியும் கண்டுள்ளதாக OCCRP அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
OCCRP அமைப்பு அதானி குழுமம் தனது வர்த்தக கூட்டாளிகளின் வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக அதானி பங்குகளை சுமார் 430 மில்லியன் டாலருக்கு வாங்கி சந்தையில் செயற்கையாக பங்கு விலை மற்றும் சந்தை மதிப்பீட்டையும் அதிகரித்துள்ளதாக வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று வேதாந்தா குழுமம் குறித்த அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதுக்குறித்து OCCRP அமைப்பு அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்திடம் கேள்வி கேட்ட நிலையில் தேசிய வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்களில் தன்னிறைவை நோக்கிய இந்தியாவின் சிறந்த நலனுக்காக தொடர்ச்சியான பிரதிநிதித்துவங்கள் அரசாங்கத்திடம் முன் வைக்கப்படும். இதன் ஒரு பகுதியாக தான் இந்த அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டதாக வேதாந்தா செய்தி தொடர்பாளர் OCCRP அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
இன்றைய வர்த்தகத்தில் வேதாந்தா நிறுவன பங்குகள் 1.68 சதவீதம் உயர்வுடன் 236.35 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications