நம் நாட்டில் மிகவும் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர் தான் அனில் அம்பானி. ஒரு காலத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் பத்து இடத்துக்குள் இருந்தவர் அனில் அம்பானி. ஆனால் இப்போது இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் கூட இல்லை.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் நேவல் போன்றவை அனில் அம்பானி நிறுவனங்களாகும். சில நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து திவாலாகின. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அனில் அம்பானி வர்த்தகத்தை நடத்தவே போராடி வருகிறார்.

அனில் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. கடன் சுமையை குறைக்கும் நோக்கில் அனில் அம்பானி தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகிய நிறுவனங்களை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனில் அம்பானிக்கு தற்போது ஒரு பெரிய நம்பிக்கையை அவரது ரிலையன்ஸ் பவர் நிறுவனம் கொடுத்து வருகிறது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
ஒரு சமயத்தில் அனில் அம்பானியின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய ரிலையன்ஸ் பவர் இடையில் சரிவை சந்தித்தது. தற்போது ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மீண்டும் எழுச்சி காண தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஆறு மாதங்களில் இரு மடங்காக உயர்ந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் பங்கின் விலை 1 ரூபாய்க்கு வர்த்தகமானது.
இந்நிலையில் கடந்த ஒராண்டில் ரிலையன்ஸ் பவர் பங்கின் விலை படிப்படியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. ரிலையன்ஸ் பவர் பங்கின் விலை ரூ.20க்கு மேல் சென்றது. கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று ரிலையன்ஸ் பவர் பங்கின் விலை ரூ.20.12ஆக இருந்தது. கடந்த 20ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ரிலையன்ஸ் பவர் பங்கின் விலை ரூ.18.49ஆக இருந்தது.
கடந்த 6 மாத காலத்தில் ரிலையன்ஸ் பவர் பங்கின் விலை ரூ.9.50லிருந்து ரூ.20க்கு மேல் உயர்ந்தது. அண்மையில் ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகியவை ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் மூலம் பெரும் தொகையை திரட்டின. இதன் காரணமாகத்தான் ரிலையன்ஸ் பவர் பங்குகளின் விலை திடீரென உயர்ந்துள்ளதாக தகவல்.
ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தற்போது ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான சொத்துக்களையும், ரூ.8,400 கோடிக்கும் மேல் வருவாயையும் கொண்டுள்ள நிறுவனமாக உள்ளது.


Click it and Unblock the Notifications