மும்பை: ஒரு காலத்தில் இந்தியாவின் டாப் பணக்காரராக இருந்த அனில் அம்பானி தொழிலில் நஷ்டமடைந்து திவால் நிலைக்கு சென்றுவிட்டார். ஆனால் அவர் அதிலிருந்து தற்போது படிப்படியாக மீண்டு வருகிறார்.
தன்னுடைய தொழில்களை மீட்டெடுத்து வரும் அனில் அம்பானி நிர்வாகிகளையும் பெருமளவில் மாற்றி இருக்கிறார். அந்த வகையில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர் மற்றும் தி ரிலையன்ஸ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் ஆகிய நிறுவனங்களை இவர் மறுக்கட்டமைப்பு செய்துள்ளார். குறிப்பாக இந்த நிறுவனங்களில் பணியாற்றும் நான்கு பேருக்கு வாரிய இயக்குனர் பொறுப்பை இவர் வழங்கியுள்ளார்.

இதன்படி ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான அசோக் பால், சசான் பவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சச்சின் முகபத்ரா, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் கார்ப்பரேட் பிரிவு தலைவரான ஹர்மன்ஜித் சிங் ஆகியோர் வாரிய குழு உறுப்பினராக பதவி வகிக்க உள்ளனர்.
இவர்களில் முகபத்ரா மற்றும் ஹர்மன் ஜீத் ஆகியோர் கூடுதல் இயக்குனர்களாகவும் ,அசோக் பால் எக்ஸிக்யூட்டிவ் இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல கார்ப்பரேட் டெவலப்மெண்ட் பிரிவின் தலைவராக இருக்கும் பார்த்தா சர்மாவும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் குழுமத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் குழுமம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் இளம் குழுவினரை கொண்டு ரிலையன்ஸ் குழுமம் 2030ஆம் ஆண்டுக்குள் பெரிய வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடனே தற்போது வாரிய குழு உறுப்பினர்களை மாற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த புதிய இயக்குனர்களுக்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் ரிலையன்ஸ் கார்ப்பரேட் மையம் தொடர்ச்சியாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் அசோக் பால் 25 ஆண்டுகளாக நிதி துறையில் வல்லவராக இருப்பவர், முக பத்ரா உலகின் முன்னணி நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தினை பல ஆண்டுகளாக வழி நடத்தி வருபவர், ஹர்மன் ஜித் பொறுத்தவரை மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 30 ஆண்டு கால அனுபவம் பெற்றவர்.
சர்மாவை கார்ப்பரேட் பிரிவில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். எனவே இதன் மூலம் தன்னுடைய நிறுவனங்கள் பழைய நிலைக்குத் திரும்பும் என அனில் அம்பானி நம்பிக்கையோடு இருக்கிறாராம். அனில் அம்பானியோடு அவரது மகன்களும் தொழிலில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
திருபாய் அம்பானியால் தொடங்கப்பட்டது தான் ரிலையன்ஸ் குழுமம். இவரது மகன்கள் அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி. இதில் அனில் அம்பானி ஒரு காலத்தில் தொழிலில் கொடி கட்டி பறந்தவர், இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். தற்போது அவரது சகோதரர் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications