முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அனில் அம்பானிக்கு சொந்தமாக செயல்பட்டு வரக்கூடிய ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சோலார் மற்றும் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலைன்ஸ் நியூ சன் டெக் நிறுவனம் அடுத்த 24 மாதங்களுக்குள் இந்த திட்டத்தை நடத்தி முடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சூரிய ஒளி சக்தி மின் திட்டத்திற்காக ரூ.10,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது. இந்த சோலார் திட்டத்திற்காக ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான நவரத்தினா நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிடம் 25 ஆண்டுகளுக்கான பவர் பர்ச்சேஸ் ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் நியூ சன்டெக் நிறுவனம் நூல் ஒரு கிலோ வாட் இருக்கு ஒரு kWhக்கு 3.53 ரூபாய் என்ற அளவில் விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தப்புள்ளி கோரி இந்த ஒப்பந்தத்தை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 465 MW/1,860 MWh பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட 930 MW சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்து ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வழங்க இருக்கிறது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி திட்டம் இதுவாகும். இதற்கான ஒப்பந்த புள்ளியில் இந்தியாவை சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் கலந்து கொண்டதாகவும், அதில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வழங்கிய விலை அரசு எதிர்பார்த்த அளவில் இருந்ததால் தான் அந்த நிறுவனத்திற்கு இந்த சூரிய ஒளி மின்சக்தி திட்டம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனம் அரசின் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை பெற்றதாக தகவல் வெளியானதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 41.54 ரூபாய் என வர்த்தகமானது.
ரிலையன்ஸ் குழுமத்தை தோற்றுவித்த திருபாய் அம்பானியின் மகன்கள் தான் அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி. அனில் அம்பானி ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்து திவால் நிலைக்கு சென்றவர். தற்போது அவர் அதில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications