எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு என்று எல்லோரும் பரிதாபப்படும் நிலையில் இருக்கிறார் அனில் அம்பானி. 2008ல் 4,200 கோடி டாலர் சொத்து மதிப்புடன் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருந்தார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்), ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் நேவல் போன்றவை அனில் அம்பானி நிறுவனங்களாகும். அனில் அம்பானியின் அசுர வளர்ச்சியே அவரது வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.

அனில் அம்பானி செய்த முதலீடுகள் எதிர்மறையாக அமைந்தது. தென்னாப்பிரிக்க நிறுவனமான எம்.டி.என்.வுடனான ஒரு வர்த்தகத்தில் அனில் அம்பானி 200 கோடி டாலர் முதலீடு செய்தார். இதனால் இறுதியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடனில் விழுந்தது. சில நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து திவாலாகின.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக அனில் அம்பானி வர்த்தகத்தை நடத்தவே போராடி வருகிறார். வாங்கி கடனை திரும்ப செலுத்த முடியாததால் 2020ல் அனில் அம்பானி நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவித்தார்.
தற்போது அனில் அம்பானியின் திவாலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) நிறுவனத்தின் சில நிலங்கள், அலுவலக இடங்கள் மற்றும் பங்குகளை விற்பனை செய்ய தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மும்பை கிளை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஆர்காம் நிறுவனம் ஒழுங்குமுறை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (என்.சி.எல்.டி.) மும்பை கிளை, ஆர்காமின் சில சொத்துக்கள் மற்றும் பங்குகளை நிறுவனத்தின் திவால் நிபுணர் மூலம் விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
சிஐஆர்பி விதிமுறைகளின் 29வது விதியின் கீழ், கார்ப்பரேட் கடனாளியின் (ஆர்காம்) சொத்துக்களை விற்க திவால் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. தீர்மானத் திட்டம் ஒப்புதலுக்கு சமர்பிக்கப்பட்ட பிறகு சொத்துக்களை விற்பனை செய்யலாம் என்று என்.சி.எல்.டி. கடந்த 7ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது.
என்.சி.எல்.டி. அனுமதி அளித்ததையடுத்து, ஆர்காம் நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னையில் உள்ள கட்டிடம் மற்றும் நிலம், புவனேஸ்வரில் உள்ள அலுவலகம், புனேயில் உள்ள 87.1 சதுர மீட்டர் நிலம், சென்னை அம்பத்தூரில் உள்ள 3.44 ஏக்கர் நிலம் மற்றும் ரிலையன்ஸ் ரியாலிட்டி மற்றும் கேம்பியன் பிராப்பர்ட்டிஸ் உள்ளிட்ட சொத்துக்கள் விற்கப்படலாம்.


Click it and Unblock the Notifications