கல்வி வெறும் கற்றல் மட்டுமல்ல அது பெரிய செல்வத்துக்கான திறவுக்கோல் என்று பலரும் சொல்ல கேட்டு இருப்போம். அது உண்மை தான் என்பதை சமுன்னதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமாரின் வாழ்க்கை நமக்கு நிச்சயம் உணர்த்தும்.
கிளார்க் ஆக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று சி.இ.ஓ.வாக உயர்ந்திருக்கும் அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். கர்நாடக மாநிலம் கோலாரை சேர்ந்தவர் அனில் குமார் எஸ்ஜி. இவர் தனது பள்ளிப் படிப்பை பெல்லாரி (கர்நாடகா) மற்றும் அனந்தபூரில் (ஆந்திர பிரதேசம்) நிறைவு செய்தார்.

அதனை தொடர்ந்து துமகூருவில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார் இருப்பினும் குடும்பம் பொருளாதார சூழல் காரணமாக 6 மாதத்திலேயே அதனை தொடர முடியாமல் போனது. இதனையடுத்து 1991ல் தனது 18 வயதில் கனரா வங்கியில் எழுத்தராக வேலைக்கு சேர்ந்தார். 1996ல் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சேர்ந்தார்.
அந்த வங்கியின் ஹைதராபாத் மற்றும் குண்டூர் கிளைகளில் பணியாற்றினார். இந்த நிறுவனங்களில் பணியாற்றும் போதே, அவர் தொலைத்தூர கல்வி வாயிலாக எம்.பி.ஏ. முடித்தார். 2004ல் மேற்படிப்பு படிக்கும் ஆசையில் பிலிப்பைன்ஸில் மணிலாவில் உள்ள ஆசிய மேலாண்மை பயிலகத்தில் பொது மேலாண்மை படிப்பதற்காக அங்கு சென்றார்.
அங்கு குறுகடன்களின் தந்தை போற்றப்படுபவரும், உலகின் சிறந்த வங்கியாளர்களில் ஒருவருமான முகமது யூனுஸின் வாழ்க்கை வரலாறை படிக்கும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்தது. அது அனில் குமாரின் மனதில் பெரிய தாக்கம் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு படித்து முடித்தவுடன், 2005ல் மும்பையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை அலுவலகத்தில் கிராமப்புற பேங்கிங் மற்றும் அக்ரி பிசினஸ் குழுவில் சேர்ந்தார்.
அந்த வங்கியின் மைக்ரோ பைனான்ஸ் வர்த்தகத்தை விரிவுப்படுத்த இரண்டு ஆண்டுகள் சமூகம் சார்ந்த குழுக்கள் மற்றும் என்.ஜி.ஓ.க்களுடன் இணைந்து பணியாற்றினார். அப்போது, குறைந்த வருமானம் கொண்ட கிராமப்புற குடும்பங்களுக்கு பலவிதமான நிதி சேவைகளை வழங்கும், நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை (ஐ.எஃப்.எம்.ஆர்.) தொடங்குவதற்காக அவரை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சென்னைக்கு அனுப்பியது.
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஐ.எப்.எம்.ஆர். கிளைகளை தொடங்கியது. இந்த சூழ்நிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து விலகினார். இருப்பினும் ஐ.எஃப்.எம்.ஆர். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தொடர்ந்து பணியாற்றினார்.
2014ல் ஐ.எஃப்.எம்.ஆர். நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, அந்த ஆண்டு நவம்பரில் ரூ.88 லட்சம் முதலீட்டில் தனது வீட்டில் 3 பணியாளர்களுடன் சமுன்னதி நிறுவனத்தை அவர் தொடங்கினார். இந்நிறுவனம் விவசாயிகள், விவசாய நிறுவனங்கள் மற்றும் மொத்த/சில்லரை விற்பனையாளர்கள் உள்பட குறு,சிறு மற்றும் நடுத்த உரிமையாளர்களுக்கு நிதி, இணை நிதி மற்றும் நிதி அல்லாத தீர்வுகளை வழங்குகிறது.
இந்நிறுவனம் முதலில் திருவண்ணாமலையில் பால் மதிப்பு சங்கிலியாக தொடங்கப்பட்டது. இன்று 5,500 உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு, உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் மற்றும் நாடு முழுவதும் 4,000 விவசாய நிலங்களை நிறுவனங்களை தவிர 80 லட்சம் சிறு விவசாயிகளை கொண்ட சங்கங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
மேலும் 23 மாநிலங்களில் இந்நிறுவனம் சேவையை விரிவுப்படுத்திப்படுத்தியுள்ளது, இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.6,000 கோடியாக உள்ளது. சமுன்னதி நிறுவனம் தற்போது 50 அலுவலகங்கள் மற்றும் 600 பணியாளர்களுடன் செயல்படுகிறது.


Click it and Unblock the Notifications