தமிழ் திரையுலகின் ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. சமூகவலைதளங்கள் எங்கும் இவர்களின் திருமண புகைப்படங்களே நிரம்பியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் கிரீஸில் உள்ள பிரம்மாண்ட சொகுசு விடுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தலைமையில் உற்சாகமாக திருமணம் நடந்து முடிந்து அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கிரீஸில் உள்ள Four Seasons Astir Palace Hotel-இல் தான் இந்த பிரம்மாண்ட திருமணம் நடந்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தின் வாரிசுக்கும், முன்னணி இசையமைப்பாளருக்கும் நடைபெறும் திருமணம் என்பதால், இந்த திருமண செலவுகள் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளன.
திருமண ஏற்பாடுகள், விருந்தினர்களுக்கான சிறப்பு விமானங்கள், கிரீஸில் தங்குவதற்கான சொகுசு விடுதிகள் மற்றும் ஆடம்பர விருந்துகள் என மொத்தமாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் திருமணச் செலவு குறித்த அதிகாரப்பூர்வ கணக்குகளை இரு குடும்பத்தாரும் வெளியிடவில்லை.
Four Seasons Astir Palace Hotel -இல் ஆடம்பரமான ஒரு அறையின் ஒரு நாள் வாடகையே 12 லட்சம் ரூபாய் ஆகும். ஒரு குறிப்பிட்ட பகுதியை முழுமையாக வாடகைக்கு எடுத்தால் 12 கோடி ரூபாய் வரை கட்டணமாம். அது மட்டுமில்லாமல் நெருங்கிய உறவினர்கள், திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை கிரீஸுக்கு அழைத்து செல்ல 4 தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செலவும் இதில் இடம்பெற்றுள்ளது.
அது தவிர ஆடம்பர விருந்து நிகழ்ச்சியும் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு திருமணத்திற்கு வைக்கப்பட்ட ஆடம்பர பத்திரிக்கையே பல ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. கிரீஸில் திருமணத்தை முடித்துள்ள இந்த தம்பதியினருக்கு, வரும் நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி ,தமிழக முதலமைச்சர் விஜய், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்களும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே மொத்தமாக 100 கோடி முதல் 150 கோடி ரூபாய் வரை திருமண செலவுகள் ஆகலாம் என சிலர் கணிக்கின்றனர்.
கலாநிதி மாறனின் சன் குழும சொத்து மதிப்பு சுமார் 24,600 கோடிக்கு மேல் உள்ள நிலையில், அதன் ஒரே வாரிசு காவ்யா மாறன் தான். அதே வேளையில் அனிருத் வேகமாக வளர்ந்து ஒரு இசை அமைப்பாளர். எனவே சென்னையில் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியும் இந்திய அளவில் மிக அதிக பொருட்செலவில் நடைபெறும் நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

