சென்னை: இந்தியாவில் தற்போது ஸ்டார்ட் அப் கலாச்சாரம் வேகமெடுத்து வருகிறது. கல்வி நிறுவனங்களே மாணவர்கள் புது புது ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அவற்றை மக்களுக்கு பயனுள்ள பொருட்களாக மாற்ற உதவி செய்கின்றன. இதற்கு முன்னோடியாக ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்கா என்ற அமைப்பை நிறுவி பல்வேறு ஸ்டார்ட் அப்களுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் உதவுகிறது.
ஐஐடி மெட்ராஸை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகமும் தங்கள் வளாகத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதன்படி தங்கள் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும், பணிபுரியும் ஆசிரியர்களும் தொழில் முனைவோராக மாறக்கூடிய வகையில் அண்ணா பல்கலைக்கழக மூலோபய தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பூங்கா (Anna University Strategic Technology Research and Innovation Park (AUSTRIP)) என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

ஐஐடி மெட்ராஸின் ஆராய்ச்சி பூங்காவை முன்னோடியாக கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் இந்த அமைப்பினை ஏற்படுத்த இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு கூட்டத்தில் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான பூங்காவை வடிவமைப்பதற்கான திட்டப் பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன விரைவில் இவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பினை பிரிவு 8இன் கீழ் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனமாக பதிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வி செயலாளர் இடம் ஆலோசனை நடத்தி இதனை ஒரு நிறுவனமாக பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என செய்தி சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு இந்திய நிறுவனங்கள் சட்டம் 2013இல் பிரிவு 8இன் கீழ் இதனை லாப நோக்கமற்ற நிறுவனமாக பதிவு செய்தால் அது சுதந்திரமான அமைப்பாக செயல்படும்.
மேலும் இந்த அமைப்பின் மூலம் கிடைக்கும் லாபம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் இந்த அமைப்பினுள் இருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சியில் மறுமுதலீடு செய்யப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறு பிரிவு 8இன் கீழ் நிறுவனங்களாக பதிவு செய்யப்படும் அமைப்புகளுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட சில வரி சலுகைகளையும் வழங்குகிறது. ஏற்கனவே ஐஐடி மெட்ராஸ் தொடங்கியிருக்கும் ஆராய்ச்சியை பூங்காவும் இந்த பிரிவு 8இன் கீழ் தான் நிறுவனமாக பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நிறுவனத்தில் பல்வேறு தொழில்துறை நிபுணர்களும் கல்வியாளர்களும் வாரிய குழு உறுப்பினர்களாக இணைய உள்ளனர். இவர்கள் இந்த அமைப்பின் மூலம் பல்வேறு ஸ்டார்ட் அப்கள் உருவாவதற்கு உதவியாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது மாணவர்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மக்களுக்கான ஒரு தயாரிப்பாக மாற்றுவதற்கான பணிகளையும் இந்த நிறுவனம் மேற்கொள்ளும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications