தமிழ்நாட்டில் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதார சுமையை குறைக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு 'அன்னபூரணி சூப்பர் 6' திட்டத்தை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் விஜய் நேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் முதற்கட்டமாக, குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

வரும் பொங்கல் பண்டிகை முதல் அமலுக்கு வரவுள்ள இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள். இதற்காக அரசு தரப்பில் ஆண்டுதோறும் தோராயமாக 4,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. சிலிண்டருக்கான தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இத்திட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களை முழுமையாக சென்று சேர்வதை உறுதி செய்வதற்காக வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட வருமான வரம்பிற்குள் இருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக கிடைக்கும் என விஜய் அரசு அறிவித்துள்ளது.
அதாவது ஓராண்டுக்கு ஒரு குடும்பத்தின் வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2.5 லட்சத்தை ஓராண்டுக்கு பார்த்தால், ஒரு குடும்பத்தின் மாத சராசரி வருமானம் தோராயமாக 20,000 முதல் 20,800 ரூபாய் வரை மட்டுமே இருக்க வேண்டும். அதாவது ஒரு மாதத்திற்கு உங்கள் குடும்ப வருமானம் 20,800 ரூபாய்க்கு மேல் இருந்தால் அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் உங்களுக்கு இலவச சிலிண்டர் கிடைக்காது.
அரசின் இந்த நலத்திட்டமானது உண்மையான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை மையமாக கொண்டு செயல்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்த வருமான வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே வருமான அடிப்படையில் இந்த திட்டத்தில் பயனாளிகள் தேர்வ்உ செய்யப்படுவார்கள். இதன்படி தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் சிலிண்டர் பெற்ற பிறகு, அதற்கான கட்டணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இன்றைய தேதிக்கு ஒரு சிலிண்டர் மற்றும் டெலிவரி மேனுக்கு கொடுக்கும் தொகையை சேர்த்தால் 1000 ரூபாய் தேவைப்படும். விஜய் அரசின் இந்த திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஓராண்டுக்கு 3000 ரூபாய் மிச்சமாகும். ஏற்கனவே விலைவாசி உயர்வில் தவிக்கும் மக்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இந்த திட்டத்தில் பயனாளிகள் தேர்வு முறை குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட உள்ளது. அப்போதே நாம் விண்ணப்பம் செய்ய வேண்டுமா அல்லது ரேஷன் கார்டு அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்களா என்ற விவரங்கள் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications

