பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரு தம்பதி வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்கான விசா பெற்று தருவதாக கூறி 2 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த சக்லாய்ன் சுல்தான் என்பவரும் அவருடைய மனைவி நிகிதா சுல்தான் என்பவரும் திலக் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் பேஸ்புக் வாயிலாக விளம்பரம் செய்து ஜப்பான், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ,பிரான்ஸ் மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை வாங்கி தருவதாகவும் இதற்காக வேலைவாய்ப்பு விசாக்களை பெற்று தருவதாகவும் விளம்பரம் செய்துள்ளனர்.

குறிப்பாக ஜாக்கி வேலைக்கு விசா பெற்று தரப்படும் என விளம்பரம் செய்து வந்தனர். இந்த விளம்பரத்தை நம்பி பலரும் இந்த தம்பதியினரை தொடர்பு கொண்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாக்சிங் என்பவர் இவர்களை தொடர்பு கொண்டு தன்னுடைய நண்பர்கள் நியூசிலாந்து மற்றும் ஜப்பானுக்கு சென்று ஜாக்கி வேலை செய்வதற்கு விசா பெற்று தரும்படி கேட்டுள்ளார். இதற்காக இந்த தம்பதி 8 லட்சம் ரூபாயை பெற்று விசா வாங்கி தந்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியது.
இதனை அடுத்து மாக்சிங் மேலும் 50 பேரை அழைத்து வந்து அவர்களுக்கும் விசா பெற்று தரும்படி கூறியுள்ளார். அவர்களிடம் இந்த தம்பதியினர் மொத்தமாக 2.6 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளனர். இந்த பணத்தை கொண்டு துபாய், இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆடம்பரமாக பொழுதை கழித்துள்ளனர். மீண்டும் அவர்கள் பெங்களூருவுக்கு திரும்பிய நிலையில் அவர்களால் உறுதியளித்தபடி இந்த 50 பேருக்கும் விசா வாங்கி தர முடியவில்லை. எனவே போலியாக விசா தயாரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த 50 பேரும் இந்த தம்பதிகள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து தற்போது ஒரு எஸ்யூவி கார் , ஒரு செடான் கார், இரண்டு இருசக்கர வாகனங்கள், 24 கிராம் தங்கம் மற்றும் 64 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விசா மோசடி விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் யாரும் இதை போன்ற போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அண்மையில் தான் இந்தியாவில் இருந்து போலி முகவர்கள் மூலம் ஆவணங்கள் ஏதுமில்லாமல் முறைகேடாக அமெரிக்கா சென்ற இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். தற்போது மற்றொரு விசா மோசடி விவகாரம் வெளிவந்துள்ளது. எனவே மக்கள் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications