சென்னை: மும்பை பங்குச்சந்தையில் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ பங்கு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சீனாவின் மிகப்பெரிய நிதியியல் சேவை நிறுவனமான ஆண்ட் குரூப்பின் கிளை நிறுவனமான ஆண்ட்ஃபின் சிங்கப்பூர், சோமேட்டோ நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகளின் இருப்பில் ஒரு பகுதியை 408 மில்லியன் டாலர் அதாவது 3,422.84 கோடி ரூபாய் மதிப்புக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
சிஎன்பிசி-டிவி18 வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஆண்ட் ஃபின் சிங்கப்பூர், 13.6 கோடி பங்குகள் அல்லது 1.54% பங்குகளைச் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) பிளாக் டீல் வாயிலாக விற்பனை செய்ய உள்ளது. இந்த பிளாக் டீல் விற்பனையில், குறைந்தபட்ச விலை ஒரு பங்கிற்கு ரூ. 251.68 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இது திங்கள் கிழமை சோமேட்டோவின் இறுதி விலையான ரூ.262.3-ல் இருந்து 4% தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு ஜூன் காலாண்டின் இறுதியில், ஆண்ட் ஃபின் சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சோமேட்டோவில் 37.38 கோடி பங்குகள் அல்லது 4.3% பங்குகளை வைத்திருந்தது.
இது இந்த ஆண்டு சீன முதலீட்டாளரால் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பங்கு விற்பனையாகும். இதற்கு முன்னர், மார்ச் மாதத்தில், ஆண்ட் ஃபின் ரூ.2,827 கோடி மதிப்புள்ள 9.7 கோடி சோமேட்டோ பங்குகளை பிளாக் டீல் வாயிலாக விற்றது.
சோமேட்டோவின் நிதி செயல்திறன் மேம்பட்டு வரும் நிலையில், இந்த பங்குகளை விற்பனை செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் சோமேட்டோ பங்கு பிஎஸ்இ-யில் ரூ. 280ஐ தொட்டது. இதற்கு முன்பு, உலகளாவிய தரகர் நிறுவனமான யூபிஎஸ், பங்கின் இலக்கு விலையை ரூ.260-ல் இருந்து ரூ. 320 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தீபேந்தர் கோயல் தலைமையிலான இந்த நிறுவனம் ரூ.253 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய ரூ.2 கோடி நிகர லாபத்தை விட பல மடங்கு அதிகம்.
2025ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், சோமேட்டோ-வின் இயக்க வருவாய் 74% அதிகரித்து ரூ.4,206 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.2,416 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.3,562 கோடியாக இருந்த இயக்க வருவாய் 18% அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications